விதான் சவுதாவை பார்த்தால் கனவுகளுக்கு உத்வேகம்
பெங்களூரு : ''விதான் சவுதா உலகின் மிக அழகான கட்டடங்களில் ஒன்று. இது ஜனநாயகத்தின் கோவில். இதை பார்க்க வருவோர் கனவுகளுக்கு உத்வேகம் அளிக்கும்,'' என, அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.பெங்களூரு, விதான் சவுதாவை பொது மக்கள் சுற்றி பார்க்கும் சுற்றுலா திட்டத்திற்கான துவக்க விழா நேற்று விதான் சவுதா மண்டபத்தில் நடந்தது. சபாநாயகர் காதர், மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, சுற்றுலா துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஹெச்.கே.பாட்டீல் பேசுகையில், ''விதான் சவுதா உலகின் மிக அழகான கட்டடங்களில் ஒன்று. இது ஜனநாயகத்தின் கோவில். இதை பார்க்க வருவோர் கனவுகளுக்கு உத்வேகம் அளிக்கும்,'' என்றார். ஆலோசனை
சபாநாயகர் காதர் பேசுகையில், ''விதான் சவுதா எல்லாருக்குமானது என்பதை மக்கள் உணர வேண்டும். இத்திட்டம் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடந்தது. இதற்கான பொறுப்பு சுற்றுலாத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, ''நான் மாணவனாக இருந்தபோது விதான் சவுதாவை பார்க்க வந்தேன். அப்போது, பல சிரமங்களுக்கு பிறகு தான் விதான் சவுதாவை பார்த்தேன். அது என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம்,'' என்றார்.இத்திட்டம் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து ஞாயிற்றுக் கிழமைகள், இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் விதான் சவுதாவை காண பொது மக்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கு கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படும். 15 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இலவசம்.காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பார்க்க அனுமதி. கேட் 3லிருந்து, சுற்றுலா பயணியர் உள்ளே சென்று, விதான் சவுதாவின் அழகை ரசிக்கலாம். 30 பேர் கொண்ட குழுவாக சுற்றுலாப் பயணியர் அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு குழுவுடன் ஒரு வழிகாட்டி இருப்பார். அடையாள அட்டை
சுற்றுலாவுக்கு வருவோர், தங்களின் ஆதார் கார்டு போன்ற அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். குடிநீர் தவிர எதையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இன்னும் பல விதிகள் உள்ளன.டிக்கெட்டை சுற்றுலாத் துறை இணையதளத்திலோ அல்லது நேரில் வந்தோ பெற்றுக் கொள்ளலாம். சட்டசபை கூட்டத் தொடரின்போது அனுமதி கிடையாது.