உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எம்.எல்.ஏ.,க்களுடன் சிவகுமார் குதிரை பேரம்: பிரஹலாத் ஜோஷி 

எம்.எல்.ஏ.,க்களுடன் சிவகுமார் குதிரை பேரம்: பிரஹலாத் ஜோஷி 

தார்வாட்: ''முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, குதிரை பேரம் நடத்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை தனது ஆதரவாளர்களாக மாற்ற, துணை முதல்வர் சிவகுமார் முயற்சிக்கிறார்,'' என மத்திய உணவு பொது வினியோக துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.'காங்கிரசின் 55 எம்.எல்.ஏ.,க்களை அமலாக்க துறையை வைத்து மிரட்டி, பா.ஜ.,வுக்கு இழுக்க அக்கட்சி முயற்சிக்கிறது' என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர் கூறியிருந்தார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டி:

ஈ.டி., ரெய்டு

முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, குதிரை பேரம் நடத்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை தனது ஆதரவாளர்களாக மாற்ற, துணை முதல்வர் சிவகுமார் முயற்சிக்கிறார். இதை மறைப்பதற்காக, பா.ஜ., மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர் குற்றம்சாட்டி உள்ளார்.முறைகேடு செய்தவர்கள் மட்டுமே ஈ.டி., ரெய்டுக்கு அஞ்ச வேண்டும். காசப்பனவர் ஏன் பயப்படுகிறார் என்று தெரியவில்லை.

உட்கட்சி பூசல்

'சிவகுமாருக்கு போதுமான எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவாக இல்லை' என்று சித்தராமையா கூறியதில் இருந்து, கட்சிக்குள் உட்கட்சி பூசல் அதிகரித்து உள்ளது. இதனால் முதல்வரும், துணை முதல்வரும் தங்கள் பலத்தை காட்ட, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களையே தங்களுக்கு ஆதரவாக செயல்பட, விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் மாற்று கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் கைகோர்க்கின்றனர்.கர்நாடக காங்கிரஸ் மீது இருந்த தங்களின் கட்டுப்பாடு எல்லை மீறி சென்றுவிட்டதை உணர்ந்த கட்சி மேலிடம், 'யாருக்குஅதிக எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளதோ அவர்களே முதல்வராவார்' என்று கூறிவிட்டது. இதுவே தற்போது நடக்கும் நடவடிக்கைகளுக்கு காரணமாகும்.இவர்களின் சண்டையால், மாநிலத்தில் நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்து கொண்டே செல்கிறது. உடனடியாக அக்கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தை பாதுகாக்க வேண்டிய எம்.எல்.ஏ.,க்களே, இடம் மாற்றம் என்ற பெயரில், கொள்ளை அடிக்கின்றனர். காலியாக உள்ள அரசு பணிகளை நிரப்ப, அரசிடம் போதிய நிதி இல்லை. இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை