9 பேர் பலியான வழக்கு; விசாரணையில் அதிர்ச்சி
பெங்களூரு: மோசமான அடித்தளம் அமைக்கப்பட்டதே பாபுசாப்பாளையாவில் கட்டடம் இடிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது.பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே பாபுசாப்பாளையாவில் கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி புதிதாக கட்டப்பட்டு வந்த ஏழு மாடி கட்டடம் இடிந்த விழுந்தது. இதில், கட்டட இடிபாடுகளில் சிக்கி ஒன்பது தொழிலாளர்கள் இறந்தனர். இதுதொடர்பாக கட்டட உரிமையாளர் முனிராஜ் ரெட்டி, அவரது மகன் புவன் ரெட்டி கைது செய்யப்பட்டனர்.கட்டடம் இடிந்தது பற்றி இந்திய அறிவியல் நிறுவனம் விசாரிக்க அரசு உத்தரவிட்டது. தற்போது விசாரணை அறிக்கை ஹென்னுார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'கட்டடம் கட்டுவதற்கு முன்பு ஆழமான இடம் உயர்த்தப்பட்டது. பின், எதையும் சரிபார்க்காமல் மோசமான அடித்தளம் அமைத்தனர். அஸ்திவாரம் முறையாக அமைக்கப்படாததே கட்டடம் இடிந்ததற்கு காரணம்' என கூறப்பட்டுள்ளது.