உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முடா வழக்கில் தொடர்ந்து தப்பிக்கும் சித்தராமையா

 முடா வழக்கில் தொடர்ந்து தப்பிக்கும் சித்தராமையா

பெங்களூரு: 'முடா' விசாரணைக்கு கவர்னர் அனுமதி அளித்ததை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய கோரி, முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, எட்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. 'முடா' முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்துவதற்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சித்தராமையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி, 2024 செப்., 24ல் கவர்னர் உத்தரவை உறுதி செய்தார். ஒரு மாதத்துக்கு பின், இந்த தீர்ப்புக்கு எதிராக, நவம்பரில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் சித்தராமையா மேல்முறையீடு செய்தார். இதுபோன்று, சித்தராமையாவின் மனைவிக்கு நிலம் வழங்கிய அதன் உரிமையாளர் தேவராஜும் மேல்முறையீடு செய்திருந்தார். இரு மனுக்கள் மீதும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனு சிவராமன், விஜயகுமார் ஏ.பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. ஒவ்வொரு முறை விசாரணை நடக்கும்போதும், ஒத்திவைக்கப்பட்டு வந்தது. ஏழாவது முறையாக கடந்த செப்டம்பர் 4ல் விசாரணைக்கு வந்தபோது, நவம்பர் இரண்டாவது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். நேற்று இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, சித்தராமையா தரப்பு வக்கீல் சதாபிஷ் சிவண்ணா வாதிடுகையில், ''மேல்முறையீடு மனுக்களின் விசாரணையை ஒத்திவைப்பது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே, விசாரணையை, ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்,'' என்றார். இதை கேட்ட நீதிபதிகள், விசாரணையை, ஜன., 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். கடந்த 2024 நவம்பர் இறுதியில் இந்த மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மாத இறுதியுடன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை