கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2023 சட்டசபை தேர்தலுக்கு பின், முதல்வர் பதவிக்கு சித்தராமையா, சிவகுமார் முட்டி மோதினர். 'தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி' என்று இருவருக்கும் இடையில், கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினத்துடன் அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்தது. முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலகுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. டில்லியில் தன்னை சந்திக்க ராகுலும் அனுமதி கொடுக்காததால், சிவகுமார் கடுப்பாகினார். முதல்வர் மாற்றம் குறித்து மேலிட தலைவர்களை சந்தித்து வலியுறுத்தும்படி, தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை அவர் துாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இரவு விருந்து இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை ஒக்கலிக சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் ராஜேகவுடா, ரவிகுமார் கனிகா, சரத் பச்சேகவுடா, மந்தர் கவுடா உள்ளிட்டோரும், எஸ்.சி., சமூக எம்.எல்.ஏ.,க்கள் சிவண்ணா, சீனிவாசய்யா ஆகியோரும்டில்லி விரைந்தனர். டில்லியில் உள்ள, அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தின் முன்பு காத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு வரை, அவர்களை சந்திக்க, கார்கே நேரம் ஒதுக்கி கொடுக்கவில்லை. இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு பெங்களூரில், பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில் நடந்த, இரவு விருந்தில் முன்னாள் அமைச்சர் ராஜண்ணா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கலந்து கொண்டனர். யாரும் எதிர்பாராத விதமாக இந்த விருந்தில், மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவும் கலந்து கொண்டார். இது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நேற்று காலை ஊடகத்தினர் கேள்வி எழுப்பிய போது, ''இரவு விருந்துக்கு தான் சென்றேன். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை,'' என, தினேஷ் குண்டுராவ் கூறினார். மைசூரு மண்டலம் இந்நிலையில், சிவகுமார் ஆதரவு அமைச்சர் செலுவராயசாமி தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள், கார்கேயை டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்தனர். அப்போது,'சித்தராமையாவிடம் இருந்து சிவகுமாருக்கு முதல்வர் பதவியை வாங்கி தர வேண்டும்' என்று வலியுறுத்தியதுடன், 'சிவகுமார் முதல்வராகா விட்டால், பழைய மைசூரு மண்டலத்தில் உள்ள ஒக்கலிக சமூக ஓட்டுகள் அடுத்த தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு சென்று விடும்' எனவும், அழுத்தம் கொடுத்து உள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்புக்கு பின், கார்கே பெங்களூரு புறப்பட்டு வந்தார். இந்நிலையில், சிவகுமார் தரப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெங்களூரில் உள்ள சித்தராமையா இல்லத்திற்கு அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் நேற்று காலை திரண்டு சென்று, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இறுதி முடிவு பின், மைசூரு சென்ற சித்தராமையா அங்கு அளித்த பேட்டி: கர்நாடகாவில் முதல்வர் மாற்றம், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும். அவர்கள் எடுக்கும் முடிவை நான், சிவகுமார் உட்பட யாராக இருந்தாலும் பின்பற்ற வேண்டும். சிவகுமார் தம்பி சுரேஷ் கூறியது போல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நபர் நான். எனது வார்த்தையில் இருந்து பின்வாங்க மாட்டேன். இப்போது நான் முதல்வராக உள்ளேன். முதல்வராகவே நீடிப்பேன். அடுத்தடுத்த பட்ஜெட்டுகளை நானே தாக்கல் செய்வேன். நாளை (இன்று) மல்லிகார்ஜுன கார்கேயை சந்திக்க இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நான் தலைவர் சதாசிவநகரில் உள்ள வீட்டில் சிவகுமார் அளித்த பேட்டி: நானே முதல்வராக நீடிப்பேன் என்று, சித்தராமையா கூறி உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். எனது ஆதரவாளர்கள் எனக்கு முதல்வர் பதவி கேட்டு டில்லி செல்லவில்லை. அமைச்சர் பதவி கேட்டு சென்று உள்ளனர். இரவு விருந்து நடப்பது புதிதல்ல. இது இரண்டு ஆண்டுகளாக நடக்கிறது. நான் காங்கிரசின், 140 எம்.எல்.ஏ.,க்களின் தலைவர். கோஷ்டி அரசியல் என்பது என் ரத்தத்தில் இல்லை. முதல்வர் அவரது கருத்தை கூறி உள்ளார். அதுபற்றி நான் பேச மாட்டேன். மேலிடம் சொல்வதை கேட்க வேண்டும் என்று முதல்வரே கூறி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். முதல்வர் பதவிக்காக சித்தராமையா, சிவகுமார் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டு உள்ளது, பா.ஜ., கூறி வரும் நவம்பர் புரட்சியை குறிக்கும் வகையில் உள்ளது. முதல்வர் பதவி விவகாரத்தில் வரும் நாட்களில், கர்நாடக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
தேவையின்றி பேசாதீர்கள்
கர்நாடக காங்., மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவின், 'எக்ஸ்' வலைதள பதிவு: கர்நாடக முதல்வர், துணை முதல்வருடன் கலந்துரையாடினேன். அவர்கள் ஒருமித்த கருத்துடன் உள்ளனர். தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்ட, கோஷ்டிரீதியாக பாதிக்கப்பட்ட கர்நாடக பா.ஜ.,வினர், சில ஊடகத்தினருடன் சேர்ந்து, காங்கிரஸ் அரசுக்கு எதிராக அவதுாறு பரப்புகின்றனர். ஐந்து வாக்குறுதி திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதே நமது நோக்கம். சில தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வெளியிடும் தேவையற்ற அறிக்கை ஊகங்களுக்கு வலுவூட்டி உள்ளன. தலைமை மாற்றம் குறித்து பொது அறிக்கை வெளியிடாதீர்கள். தேவையின்றி பேசாதீர்கள். சுயநலவாதிகளின் அரசியலுக்கு அடிபணியாதீர்கள். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
சிறையில் சந்திப்பு
பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேற்று காலை சென்ற சிவகுமார், கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காங்., - எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான, எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியை சந்தித்து பேசினார். அப்போது, தனக்கு முதல்வர் பதவி கிடைக்க, அவர்கள் ஆதரவு தேவை என்று கேட்டு கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.