தயிர் பாக்கெட்டில் ‘சிம்’ வாடிக்கையாளர் ‘ஷாக்’
மாண்டியா: நந்தினி தயிர் பாக்கெட்டில், சிம் கார்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவின், விஸ்வேஸ்வரய்யா நகரில் வசிப்பவர் அருண்குமார். இவர் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம் அருகில் உள்ள நந்தினி பால் பார்லரில், கால் லிட்டர் தயிர் வாங்கினார். வீட்டுக்கு சென்று உணவு சாப்பிடும் போது, தயிர் பாக்கெட்டை பிரித்து ஊற்றும் போது, அதில் இருந்து சிம் கார்டு விழுந்தஐ கண்டு அதிர்ச்சி அடைந்த அருண்குமார், நந்தினி பார்லருக்கு இதை பற்றி கேட்டார். தயிர் பாக்கெட்டில் சிம் கார்டு இருந்ததை பற்றி, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து, அருண்குமார் கூறுகையில், ‘‘லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தயிர் பாக்கெட்டில், இது போன்ற பொருட்கள் இருந்தால், அதை சாப்பிடும் மக்கள் கதி என்னவென்று தெரியவில்லை. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,’’ என்றார். பால் கூட்டுறவு சங்கத்தில், இத்தகைய பொருட்கள் பால், தயிர் பாக்கெட்டுகளில் சேர, வாய்ப்பே இல்லை. நந்தினி பிராண்ட் பற்றி, அவப்பிரசாரம் செய்யும் நோக்கில். இது போன்று செய்திருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். இது குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும்.- – ரகு, இயக்குநர், மாண்டியா பால்உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்