உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தர்மஸ்தலாவில் தோண்டப்பட்ட இடங்களில் ரேடார் கருவி பயன்படுத்த எஸ்.ஐ.டி., முடிவு

தர்மஸ்தலாவில் தோண்டப்பட்ட இடங்களில் ரேடார் கருவி பயன்படுத்த எஸ்.ஐ.டி., முடிவு

மங்களூரு: தர்மஸ்தலாவில் ஜி.பி.ஆர்., எனும் ரேடார் கருவியை பயன்படுத்தி, ஏற்கனவே தோண்டப்பட்ட 1 முதல் 12 வரையிலான இடங்களில் மீண்டும் ஆய்வு நடத்த எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக மஞ்சுநாதா கோவிலின் முன்னாள் ஊழியர் புகார் அளித்திருந்தார். எஸ்.ஐ.டி., அதிகாரிகளிடம் 13 இடங்களை அடையாளம் காட்டினார். கடந்த மாதம் 29ம் தேதி முதல் இந்த இடங்களில் தோண்டும் பணிகள் நடக்கின்றன. இதுவரை 12 இடங்கள் தோண்டப்பட்டன. இதில், இரண்டு இடங்களில் மட்டுமே எலும்புகள் கிடைத்தன. வழக்கு பதிவு நேற்று முன்தினம் மாலை நேத்ராவதி ஆற்றின் அருகே உள்ள பங்களா கிராசில், கோவில் நிர்வாகத்தை பற்றி தவறாக பேசியதால், மூன்று யு - டியூபர்கள், ஒரு கேமரா மேன் தாக்கப்பட்டனர். கார் கண்ணாடிகள், கேமராக்கள் உடைக்கப்பட்டன. இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். 'இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உறுதி அளித்தனர். இதையடுத்து, தாக்குதல் நடத்துதல், வாகனங்களை சேதப்படுத்தியதற்காக நேற்று பெல்தாங்கடி போலீஸ் நிலையத்தில் மூன்று, தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் அடையாளம் தெரியாத 150க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தர்மஸ்தலாவை சேர்ந்த சோம்நாத் சபால்யா, 48, என்பவர் கைது செய்யப்பட்டார். 13வது இடம் இந்த பதற்றமான சூழ்நிலையில், கடைசி இடமான 13வது இடத்தில் நேற்று பள்ளம் தோண்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் யாரும் காலை 11:30 மணி ஆகியும் வரவில்லை. இதனால் சலசலப்பு எழுந்தது. பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில், எஸ்.ஐ.டி., குழு தலைவர் பிரணவ் மொஹந்தி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மழை பெய்து கொண்டிருந்ததால், அதிகாரிகள் தோண்டும் பணியை துவக்கவில்லையா எனவும் கேள்வி எழுந்தது. இதற்கிடையில், மீண்டும் 1 முதல் 12 வரை 'மார்க்கிங்' செய்யப்பட்ட பகுதிகளில், ஜி.பி.ஆர்., எனும் நில த்துக்குள் இருக்கும் பொருட்களை கண்டறியும் ரேடாரை பயன்படுத்தி ஆய்வு செய்ய எஸ்.ஐ.டி., அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஜி.பி.ஆர்., ரேடார் கருவி பெங்களூரில் இருந்து தர்மஸ்தலாவுக்கு எப்போது கொண்டு செல்லப்படும் என்பது தெரியவில்லை. அப்படி ஆய்வு செய்ும்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதாவது இருந்தால் மீண்டும் தோண்ட அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று 13வது இடத்தில் தோண்டும் பணிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

30 ஆண்டுகளில் 270 உடல்கள்

 தர்மஸ்தலா கிராம பஞ்சாயத்தில் 1995லிருந்து 2015 வரை பணியாற்றிய ஊழியர்கள் குறித்த விபரங்களை எஸ்.ஐ.டி., குழுவினர் வாங்கியுள்ளனர். தர்மஸ்தலாவில் 30 ஆண்டுகளில் யாரும் உரிமை கோராத 270 உடல்கள் புதைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது  தர்மஸ்தலாவில் ஏற்பட்ட நேற்று முன் தினம் நடந்த மோதல் குறித்த வீடியோக்கள் வெளியாகின. இதில், ஒரு வீடியோவில் கன்னட பிக்பாஸ் பிரபலம் ரஜத் இருப்பது தெரிந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரஜத் கூறுகையில், “தர்மஸ்தலாவிலிருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது, யு -டியூபர்கள் என் காரை வழிமறித்து, பேட்டி கொடுக்கும்படி கேட்டனர். இதனால், பேட்டி கொடுத்தேன். அப்போது, அங்கு வந்த 60க்கும் மேற்பட்டோர், யு -டியூபர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்,” என்றார்  உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று கூறுகையில், ''தர்மஸ்தலாவில் தோண்டும்போது ஒரு இடத்தில் எலும்பு கிடைத்துள்ளது,'' என்றார்  தர்மஸ்தலா கோவில் நிர்வாகம் குறித்து அவதுாறு கருத்து தெரிவிக்கக் கூடாது என பெங்களூரு சிவில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஹர்ஷேந்திர ஹெக்கடே தாக்கல் செய்த மனு நேற்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி