உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 1987 முதல் நடந்த மரணங்கள் துாசு தட்டுகிறது எஸ்.ஐ.டி.,

1987 முதல் நடந்த மரணங்கள் துாசு தட்டுகிறது எஸ்.ஐ.டி.,

தர்மஸ்தலா: தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்த சின்னையாவை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. விசாரணைக்கு பின், ஷிவமொக்கா சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கேட்டு பெல்தங்கடி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். நேற்று மனு மீது விசாரணை நடந்தது. சின்னையா தரப்பில், மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய நீதிபதி வாதிட்டார். சின்னையாவுக்கு ஜாமின் வழங்க, எஸ்.ஐ.டி., வக்கீல் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான அடுத்த விசாரணையை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார். சின்னையா, நீதிமன்றத்தில் கொடுத்த மண்டை ஓடு, உஜ்ரேயை சேர்ந்த விட்டல் கவுடா என்பவர் கொடுத்தது என்பது, தற்போது விசாரணையில் தெரிய வந்தது. முன்பு, எஸ்.ஐ.டி., யிடம் தன் நண்பர் பிரதீப் கவுடாவுடன் சென்று, பங்களாகுட்டா வனப்பகுதியில் இருந்து, மண்டை ஓட்டை எடுத்து வந்ததாக கூறியிருந்தார். இந்த வழக்கில் பிரதீப் கவுடா சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். பெல்தங்கடி நீதிமன்றத்தில் நீதிபதி சந்தேஷ் முன், நேற்று இரண்டு மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். நேற்று மதியம் பெல்தங்கடி எஸ்.ஐ.டி., அலுவலகத்திற்கு சென்ற, ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, எஸ்.ஐ.டி., அதிகாரிகளிடம் அளித்த புகாரில், ''2006 முதல் 2010 வரை தர்மஸ்தலாவில் உள்ள காயத்ரி, வைஷாலி குடியிருப்பு பகுதியில், நிறைய பெண்கள் இறந்தனர். அனாதை பிணம் என்று, கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் புதைத்துவிட்டனர். இதுபற்றி விசாரிக்க வேண்டும்,'' என கூறி இருந்தார். வழக்கில் முன்பு விசாரணைக்கு ஆஜரான சமூக ஆர்வலர் கிரிஷ் மட்டன்னவர், 1987 முதல் தற்போது வரை, தர்மஸ்தலாவில் இறந்தவர்கள் பற்றிய தகவல்களை வழங்கி உள்ளார். கிராம பஞ்சாயத்து வைத்துள்ள ஆவணங்களில், தவறு இருப்பதாகவும் கூறி உள்ளார். இதனால் 1987 முதல் தற்போது வரை, தர்மஸ்தலாவில் நடந்த மரணம் குறித்து விசாரிக்கவும், கிராம பஞ்சாயத்து ஊழியர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவும் எஸ்.ஐ.டி., முடிவு செய்துள்ளது. இதனால் வழக்கு விசாரணை விறுவிறுப்பு எடுக்க துவங்கி உள்ளது. தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றங்கரையில், பெண்கள் உடல்கள் கிடந்தது போன்று ஏ.ஐ., தொழில்நுட்ப புகைப்படத்தை பயன்படுத்தி, யு - டியூபர் சமீர் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக சமீர் மீது தாமாக முன்வந்து பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பெங்களூரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். இரண்டு முறை விசாரணைக்கும் சமீர் ஆஜரானார். குற்றச்சாட்டு நேற்று வெளியிட்ட வீடியோவில் சமீர் கூறியிருப்பதாவது: தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக, என் 'யு - டியூப்' பக்கத்தில் வீடியோ வெளியிட்டேன். முஸ்லிம் நாடுகளிடம் இருந்து பணம் பெற்று, வீடியோ வெளியிட்டதாக கூறுகின்றனர். நான் முஸ்லிம் என்பதால் என் மீது இத்தகைய குற்றச்சாட்டு வருகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டை நான் எதிர்கொள்வது இது முதல்முறை இல்லை. பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கல்லுாரி மாணவி சவுஜன்யாவுக்கு ஆதரவாக, நான் முதல் வீடியோ வெளியிட்ட போதில் இருந்து, என் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வருகின்றன. நான் வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கியது உண்மை என்றால், விசாரணையில் தெரியவந்திருக்கும். என் ஆதார் கார்டு, பான் கார்டு, பள்ளி சான்றிதழ், கார், பைக், வங்கிக்கணக்கு ஆவணங்களை, எஸ்.ஐ.டி., அதிகாரிடம் கொடுத்துள்ளேன். பொய்யா? தர்மஸ்தலாவில் பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டது பற்றி, சின்னையா சில யு - டியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டி அடிப்படையிலும், தர்மஸ்தலாவுக்கு நானே நேரில் சென்று, சிலரிடம் கேட்டறிந்த தகவல் அடிப்படையிலும் தான், வீடியோ உருவாக்கினேன். நான் கூறியது பொய் என்றால், 20 ஆண்டுக்கு முன்பு தர்மஸ்தலா மர்ம மரணம் குறித்து, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் எழுதியது பொய்யா? தர்மஸ்தலாவில் இயற்கைக்கு மாறான மரணம் நிறைய நடப்பதாக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., உக்ரப்பா அறிக்கை அளித்தது பொய்யா? சவுஜன்யா, வேதவள்ளி, பத்மலதா இறந்தது எப்படி? போலீசார் என் வீட்டில் அடிக்கடி சோதனை நடத்தியதால், என்னையும், என் அம்மாவையும் வீட்டில் இருந்து வீட்டு உரிமையாளர் வெளியேற்றிவிட்டார். என்னை கொலைகாரன் போன்று மக்கள் பார்க்கின்றனர். விதிமீறல் ஏன் தர்மஸ்தலா சென்று மகள் அனன்யா பட் காணாமல் போனதாக, சுஜாதா பட் கண்ணீர் வடித்தார். அவரது கண்ணீரை துடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவரிடம் வீடியோ எடுத்தேன். அந்த கண்ணீர் பொய்யாக இருந்தால் நான் என்ன செய்வது? தர்மஸ்தலாவில் உள்ள லாட்ஜில் இறந்தவர்கள் அடையாளம் தெரியாதவர்கள் என்று கூறி, கிராம பஞ்சாயத்து உடல்களை புதைத்துள்ளது. லாட்ஜில் தங்குவோரிடம் ஏதாவது ஒரு அடையாள அட்டை வாங்க வேண்டும் என்று, அரசு உத்தரவிட்டு உள்ளது. இது ஏன் கடைப்பிடிக்கப்படவில்லை? இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

100 சதவீத உண்மை!

பங்களாகுட்டா வனப்பகுதியில் இருந்து மண்டை ஓட்டை எடுத்து வந்த, விட்டல் கவுடாவை, இரண்டு முறை பங்களாகுட்டா அழைத்துச் சென்று எஸ்.ஐ.டி., விசாரித்தது. விட்டல் கவுடா நேற்று வெளியிட்ட வீடியோவில், ''எஸ்.ஐ.டி., என்னை இரண்டு முறை விசாரணைக்காக, பங்களாகுட்டாவுக்கு அழைத்துச் சென்றபோது, சில எலும்புக்கூடுகளை அங்கு பார்த்தேன். அதிகாரிகளுக்கும் காட்டினேன். ஆனால் அங்கிருந்து எலும்புக்கூடு எதையும் எடுத்து வரவில்லை. தர்மஸ்தலா வழக்கில் சின்னையா கூறியது 100க்கு 100 சதவீதம் உண்மை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி