சிவகுமார் ஆர்.எஸ்.எஸ்., பாடல் தம்பி சுரேஷ் புதிய விளக்கம்
பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமார் சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பாடலை பாடியது குறித்து, அவரது தம்பியும், முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷ் புதிய விளக்கம் அளித்து உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: துணை முதல்வர் சிவகுமாருக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. நானும், சிவகுமாரும் சிறுவயதாக இருக்கும் போது, எங்கள் பாட்டி வீட்டுக்கு செல்வோம். அருகில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கிளை இருந்தது. அங்கு வரும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், பலரும் சிவகுமாரிடம் பேசுவர். அதன் மூலமாகவே, அவருக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சில பாடல்கள் தெரியும். சிவகுமார், ஒரு முறை கூட அந்த அமைப்பின் கிளைக்கு சென்றதில்லை. கே.எம்.எப்., எனும் கர்நாடகா மில்க் பெடரேஷன் தலைவர் பதவிக்கு நஞ்சேகவுடா, ராகவேந்திரா ஹிட்னால் என யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்; தலைவர் ஆகலாம். இதில், தவறு எதுவுமில்லை. புதிய அமைச்சர் தேர்வு செய்வது குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. புதுடில்லிக்கு சென்று பல நாட்கள் ஆகிவிட்டன. தர்மஸ்தலா புகார் நபரின் பின்புலம் குறித்து தெரியாது. தர்மஸ்தலா மஞ்சுநாதரை மட்டுமே நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.