உள்ளூர் செய்திகள்

சில வரி செய்திகள்

* தர்ஷன் ரசிகர்களுக்கு ஜாமின் சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷனுக்கு எதிராக கருத்து தெரிவித்த, நடிகை ரம்யாவை பற்றி சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசிய தர்ஷன் ரசிகர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பிரமோத், மஞ்சுநாத், ராஜேஷ, ஓபண்ணா, கங்காதர், சின்மய் ஆகிய 6 பேரும் ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை காரணம் காட்டி, ஆறு பேருக்கும் ஜாமின் வழங்கி நீதிபதி சிவசங்கர் அமரண்ணவர் நேற்று உத்தரவிட்டார். * தடை பிறப்பிக்க முடியாது பெலகாவியில் நவம்பர் 1ம் தேதி கன்னட ராஜ்யோத்சவாவை முன்னிட்டு, எம்.இ.எஸ்., எனும் மஹாராஷ்டிரா ஏக்கிரண் சமிதி, கருப்பு தினம் கொண்டாடுவதை தடை செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் பெலகாவியின் மல்லப்பா சாயப்பா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனச்சா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை நேற்று தள்ளுபடி செய்து, 'போராட்டம், ஊர்வலத்தை தடை செய்யும் உத்தரவை நாங்கள் பிறப்பிக்க முடியாது' என நீதிபதிகள் கூறினர். * தொல்லியல் துறைக்கு 'நோட்டீஸ்' ராம்நகர் மாகடியில் உள்ள கெம்பே கவுடா கோட்டையை பாதுகாக்கக் கோரி, கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனாச்சா அமர்வு, கன்னட கலாசார துறை, இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. * அரசுக்கு 'நோட்டீஸ்' தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே பற்றி அவதுாறு பரப்பும், மகேஷ் திம்மரோடி, கிரிஷ் மட்டன்னவர் உள்ளிட்டோரின் நிதி ஆதாரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த அரசுக்கு உத்தரவிட கோரி, பா.ஜ., பிரமுகர் தேஜஸ் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் நேற்று விசாரித்தார். மாநில அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலர், எஸ்.ஐ.டி., வருமான வரி மண்டல அதிகாரி, அமலாக்கத்துறை இயக்குநர் ஆகியோருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார். * விதிமீறினால் நடவடிக்கை துமகூரு குப்பியில் எஸ்.டி., மக்களுக்கு அரசு ஒதுக்கிய 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, மசூதி கட்டப்படுவது குறித்த பொதுநல மனுவை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு நேற்று விசாரித்தார். மசூதி கட்டப்படுவதில் விதிகள் மீறப்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை செயலர் ஷாலினிக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ