விஜயபுரா: தாயுடன் சேர்ந்து, வங்கி அதிகாரியை, 'ஹனி டிராப்' செய்து, பணம் பறிக் க முயற்சித்த நால்வர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. விஜயபுரா மாவட்டம், இன்டி நகரில் 44 வயது பெண் வசிக்கிறார். இவரது மகன் அமூல், 22. அப்பெண் இதே நகரில் இளநீர் வியாபாரம் செய்கிறார். இவருக்கு அரசு வங்கியில் மேலாளராக பணியாற்றும் அதிகாரி அறிமுகமானார். இருவரும் நெருக்கமாக பழகினர். நவம்பர் 1ம் தேதியன்று, அதிகாரியை, அப்பெண், தன் வீட்டுக்கு அழைத்திருந்தார். இருவரும் உல்லாசமாக இருந்தனர். அப்போது வீட்டின் ஜன்னலில், தன் மொபைல் போனை அப்பெண் வைத்திருந்தார். இதுகுறித்து, அதிகாரி கேள்வி எழுப்பியபோது, அது பழுதடைந்துள்ளது என, அப்பெண் கூறி சமாளித்துள்ளார். அதன்பின் அதிகாரி சென்றுவிட்டார். நவம்பர் 5ம் தேதி, அதிகாரிக்கு போன் செய்த பெண், 'நாம் இருவரும் தனிமையில் இருந்ததை, யாரோ வீடியோ எடுத்துள்ளனர். அவர்களிடம் பேசி, பிரச்னையை சரி செய்யுங்கள்' என்றார். அதன்பின் பெண்ணின் மகன் அமூல், உறவினர் மகேஷ், இவர்களின் கூட்டாளியான பத்திரிகையாளர் தவுஷிப் குரேஷி ஆகியோர், அதிகாரியை சந்தித்து, 'நீங்களும், பெண்ணும் நெருக்கமாக உள்ள வீடியோ எங்களிடம் உள்ளது. எங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இதை சமூக ஊடகங்களில் வெளியிடுவோம்' என மிரட்டினர். கலக்கமடைந்த அதிகாரி, இன்டி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கினர். இதையறிந்த அப்பெண், உறவினர் மகேஷ், தவுஷிப் தலைமறைவாகினர். பெண்ணின் மகன் அமூல் மட்டும் சிக்கினார். இவரிடம் விசாரித்ததில், தன் தாய் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து, பலரை 'ஹனி டிராப்' செய்து பணம் பறித்தது தெரிந்தது. இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் அளிக்கும்படி, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.