தந்தையை கொலை செய்து நாடகமாடிய மகன் கைது
துமகூரு: மின்சாரம் பாய்ந்து தொழிலதிபர் இறந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை சொந்த மகனே கொலை செய்திருப்பதை, கண்காணிப்பு கேமரா அடையாளம் காட்டியது.துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகாவின் ஹெப்பூரின் திம்மசந்திரா கிராமத்தில் வசித்தவர் நாகேஷ், 55. இவர் குனிகல்லின் ஷாமீர் மருத்துவமனை முன், ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார்.இம்மாதம் 11ம் தேதி இரவு, வேலை இருப்பதாக கூறி இவரும், இவரது மகன் சூர்யாவும், 19, தொழிற்சாலைக்கு சென்றனர்.சில மணி நேரத்துக்கு பின், குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்ட சூர்யா, தன் தந்தை நாகேஷ் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து இறந்ததாக கூறினார்.குடும்பத்தினர் அங்கு வந்த பார்த்தபோது, நாகேஷ் இறந்து கிடந்தார். அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்து, மறுநாள் இறுதிச்சடங்குக்கு தயாராகினர்.நாகேஷின் இறப்பில், அவரது தங்கைக்கு சந்தேகம் ஏற்பட்டது. குனிகல் போலீஸ் நிலையத்துக்குச் சென்று, தன் சந்தேகத்தை கூறி விசாரணை நடத்தும்படி புகார் அளித்தார்.போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். நாகேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணையை துவக்கினர்.இதற்கிடையில், தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.தொழிற்சாலைக்கு சென்ற தந்தைக்கும், மகனுக்கும் ஏதோ காரணத்தால் வாக்குவாதம் ஏற்பட்டதும், கோபமடைந்த நாகேஷ், சூர்யா கன்னத்தில் சரமாரியாக அடித்ததும் தெரிய வந்தது.இதற்கு சூர்யா ஏதோ கூறுவதும் அதனால் செருப்பால் அடிப்பதும் இரும்பு ராடால் அடிக்க முயன்றதும் தெரிந்தது. இதை சூர்யா தடுக்க முற்பட்டார்.ஒருகட்டத்தில் பொறுமையிழந்த சூர்யா, துண்டால் தந்தையின் கழுத்தில் போட்டு, கீழே தள்ளியவுடன், மற்றொரு வாலிபர், நாகேஷின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டது தெரிந்தது.நாகேஷ் முதுகின் மீது அமர்ந்து, கழுத்தை நெரித்து கொலை செய்த சூர்யா, தந்தையின் உடலை அங்கிருந்த மெத்தையில் படுக்க வைத்து, அவரது கையை எடுத்து, சுவிட்ச் போர்டில் வைத்து, மின்சாரம் செலுத்திய காட்சிகளை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.அதன்பின் குடும்பத்தினருக்கு போன் செய்த காட்சி முழுதும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. தந்தையை கொன்ற சூர்யா, நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு உதவியது, அவரது நண்பர் தனுஷ் என்பது தெரிய வந்தது. அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.சூர்யா, இளம்பெண் ஒருவரை காதலித்தார். இதே காரணத்தால் தந்தைக்கும், மகனுக்கும் தகராறு நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.