சொத்துக்காக தந்தை கொலை நாடகமாடிய மகன் கைது
பாகல்குன்டே, : சொத்துக்காக நண்பருடன் சேர்ந்து, தந்தையை கொலை செய்து, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மகன் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, தாசரஹள்ளியின், கெம்பேகவுடா நகரில் வசித்தவர் தொழிலதிபர் மஞ்சுநாத், 58. இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் ஐந்தாறு கட்டடங்கள், ஐந்து மனைகள், வுட் ஒர்க்ஸ் பேக்டரி வைத்துள்ளார். மூத்த மகன் மனோஜ், 25, பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார். எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றினார். இதை கண்டித்த தந்தை, மகனுக்கு புத்திமதி கூறினார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. தந்தையை கொன்று விட்டு, சொத்துகளை அபகரிக்க மனோஜ் திட்டம் தீட்டினார். இதற்காக தன் நண்பர் பிரவீணுடன் பேசி, 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக ஆசை காட்டினார். 15,000 ரூபாய் முன்பணம் கொடுத்தார். செப்டம்பர் 2ம் தேதி, மஞ்சுநாத்தின் மனைவியும், இளைய மகனும் மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்தனர். அன்றைய தினம் புட் பேக்டரியில் பணியில் இருந்த தந்தையிடம் மனோஜ், 'வீட்டுக்கு சென்று ஓய்வெடுங்கள். பணியை நான் பார்த்து கொள்கிறேன்' என, கூறி அனுப்பினார். தந்தையும் வீட்டுக்கு வந்து, சோபாவில் படுத்திருந்தார். அப்போது மனோஜும், அவரது நண்பர் பிரவீணும், மதுபானம் அருந்திவிட்டு அங்கு வந்தனர். இருவரும் சேர்ந்து டவலால், மஞ்சுநாத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். வீட்டுக்கு வந்த தாய், தம்பியிடம் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். இதை நம்பாத தாயும், தம்பியும் பாகல்குன்டே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மஞ்சுநாத்தின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர். இதில், அவர் கொலையானதாக, அறிக்கை வந்தது. அதன்பின் போலீசார் விசாரணை நடத்திய போது, சம்பவம் நடந்த நாளன்று பிரவீண், மஞ்சுநாத்தின் வீட்டுக்கு வந்து சென்றது தெரிந்தது. அவரிடம் விசாரித்த போது, மனோஜும், தானும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதன்பின் கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர்.