தாயின் அடையாள அட்டையுடன் ஜாதிவாரி சர்வே நடத்திய மகன்
ஹூப்பள்ளி: ஜாதிவாரி சர்வேவுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியைக்கு பதிலாக, அவரது மகன் சர்வே நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கர்நாடகாவில் செப்டம்பர் 22 முதல், ஜாதிவாரி சர்வே நடந்து வருகிறது. ஆய்வுக்காக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் தங்களுக்கு பதிலாக பிள்ளைகள், உறவினர் மூலமாக ஆய்வு நடத்துவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹூப்பள்ளி நகரின், மனோஜ் எஸ்டேட்டின், பி.எம்.ராயல் கார்டன் அபார்ட்மென்டில் உள்ள வீட்டுக்கு, நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர், சர்வே நடத்த வந்தார். வீட்டில் இருந்தவர்களின் தகவல்களை கேட்டார். அப்போது வீட்டு உரிமையாளர் சந்தேகமடைந்து, இளைஞரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கேட்டார். அப்போது அவர் பெண்ணின் படம் உள்ள அடையாள அட்டையை காட்டி, அவருடைய மகன் என்றார். இதனால் வீட்டினர் எந்த தகவலும் தெரிவிக்க மறுத்து, இளைஞரை அனுப்பினர். இது குறித்து, அப்பகுதியினர் அதிருப்தி தெரிவித்தனர். 'அரசின் பெயரில், யார் யாரோ வந்து எங்களை பற்றிய தகவல் பெறுகின்றனர். அக்டோபர் 7 க்குள், சர்வேயை முடிக்கும்படி ஆசிரியர்களுக்கு நெருக்கடி தரப்படுகிறது. சர்வேக்கு நியமிக்கப்பட்டவர்களில் சிலர், உடல் நிலை பாதிப்படைந்துள்ளனர். எனவே, இவர்கள் தங்களின் பிள்ளைகள், அறிமுகம் உள்ளவர்களை சர்வே நடத்த அனுப்புகின்றனர். விவேகமின்றி சர்வே நடக்கிறது' என, குற்றஞ்சாட்டினர்.