தாயை மிரட்ட முயற்சித்த மகன் துாக்கில் தொங்கினார்
நெலமங்களா: குடிபோதையில் தாயை மிரட்ட முற்பட்ட மகன், துாக்கில் தொங்கி உயிரிழந்தார். பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின் ரோஹித் நகரில் வசித்தவர் விஜயகுமார், 28. எலக்ட்ரிஷியனாக பணியாற்றினார். இவரது திருமணத்திற்கு, பெற்றோர் பெண் பார்த்தனர். ஆனால், இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். நேற்று முன் தினம் இரவில், குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். செலவுக்கு பணம் தரும்படி தாயிடம் கேட்டார். மகனை கண்டித்த தாய், பணம் கொடுக்க மறுத்தார். பணம் கொடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். இது போன்று அவ்வப்போது தற்கொலை செய்து கொள்வதாக, மகன் கூறுவது வழக்கம். அப்படி சொல்லக்கூடாது என, தாய் கண்டித்தும் மகன் திருந்தவில்லை. மகன் வேடிக்கை செய்வதாக நினைத்து, தாய் கண்டுகொள்ளவில்லை. இதனால், தாயை மிரட்டும் நோக்கில், துாக்கிட்டு கொண்ட விஜய்குமார், கயிறு இறுக்கியதில் உயிரிழந்தார். சிறிது நேரத்துக்கு பின் தாய் பார்த்த போது, மகன் இறந்தது தெரிந்தது. தகவலறிந்து அங்கு வந்த நெலமங்களா போலீசார் விசாரித்தனர்.