குடிபோதையில் தந்தை சுட்டதில் குண்டு பாய்ந்து மகன் கவலைக்கிடம்
தொட்டபல்லாபூர்:: குடிபோதையில் தந்தை சுட்டதில், தலையில் குண்டு பாய்ந்து மகன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின், மரளேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ், 49. இவரது மகன் ஹரிஷ், 28. குடிப்பழக்கத்துக்கு அடிமையான சுரேஷ், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, குடும்பத்தினருக்கு தொல்லை கொடுப்பார். இதே காரணத்தால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தினமும் சண்டை நடந்தது. நேற்று முன்தினம் இரவும், சுரேஷ் குடி போதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த சுரேஷ், தன் நாட்டுத்துப்பாக்கியால் மகனை சுட்டார். ஹரிஷின் தலையில் குண்டு பாய்ந்தது. சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ஹரிஷை மீட்டு, தொட்டபல்லாபூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளித்த டாக்டர்கள், பெங்களூரின் விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்துக்கு பின் சுரேஷ் தப்பியோடிவிட்டார். தகவலறிந்து அங்கு வந்த தொட்டபல்லாபூர் ஊரக போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சுரேஷை தேடி வருகின்றனர். போலீசார் கூறியதாவது: சுரேஷ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளோம். ஹரிஷின் தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, டாக்டர்கள் கூறியுள்ளனர். துப்பாக்கி குண்டு, மூளையை தொடவில்லை என்றாலும், எலும்புகளை பாதித்துள்ளது. அதிகமான ரத்தப்போக்கு மற்றும் உட்காயங்களால், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. சுரேஷ் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிக்கு, லைசென்ஸ் உள்ளதா, இல்லையா என்பது தெரியவில்லை. அவரை கண்டுபிடித்த பின், விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.