காரை வேகமாக ஓட்டி விபத்து: நடிகை திவ்யா சுரேஷ் மீது வழக்கு
பேட்ராயனபுரா: காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய, கன்னட நடிகை திவ்யா சுரேஷ் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. பெங்களூரு, பேட்ராயனபுராவில் வசிப்பவர் அனிதா, 24; தையல் தொழிலாளி. இவரது உறவினர் அனுஷா, 33. இவர், கடந்த 4ம் தேதி இரவு வயிற்று வலியால் அவதிப்பட்டார். பேட்ராயனபுராவில் இருந்து கிரிநகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுஷாவை, அனிதாவும், உறவினர் கிரண், 25, என்பவரும் பைக்கில் அழைத்துச் சென்றனர். கடந்த 5ம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு, பேட்ராயனபுரா எம்.என்.சாலையில் சென்றபோது, வேகமாக வந்த கறுப்பு நிற கார், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. பைக்கில் இருந்து விழுந்த, மூன்று பேரும் காயம் அடைந்தனர். அனிதாவின் மூட்டு விலகியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காலில் கட்டு போடப்பட்டது. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். விபத்து குறித்து கடந்த 8ம் தேதி, பேட்ராயனபுரா போலீசில் கிரண் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்தனர். கறுப்பு நிற கார், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. பதிவெண்ணை கொண்டு விசாரித்ததில், அந்த கார் கன்னட பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும், கன்னட சின்னத்திரை நடிகையுமான திவ்யா சுரேஷ், 32, என்பவருடையது என்பது தெரிந்தது. கடந்த 15ம் தேதி காரை போலீசார் பறிமுதல் செய்தனர். திவ்யா சுரேஷ் மீது அலட்சியமாக வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவானது. விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். விபத்து குறித்து அனிதா நேற்று கூறுகையில், ''வேகமாக வந்த கார், பைக் மீது மோதியது. காரை ஓட்டியது பெண் என்று மட்டும் தெரிந்தது. காரை நிறுத்தாமல் சென்றார். பேட்ராயனபுரா போலீசில் புகார் அளித்த பின், போலீசாரின் விசாரணையில் அந்த கார் நடிகை திவ்யா சுரேஷ்க்கு சொந்தமானது என்று தெரிந்தது. மனிதாபிமான அடிப்படையில் கூட, இதுவரை திவ்யா சுரேஷ் எங்களிடம் பேசவில்லை. வீட்டிலேயே தையல் இயந்திரம் வைத்து, தையல் தொழில் செய்தேன். இப்போது என் கால் மூட்டு விலகி உள்ளது. ஒரு ஆண்டிற்கு காலை சரியாக தரையில் ஊன்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவறு செய்த திவ்யா சுரேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.