- நமது நிருபர் - துமகூரின் குனிகல் தாலுகா, ஹுலியுர்துர்கா அருகே ஹங்கரஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வித்யா சவுடேஸ்வரி கோவில். மிகவும் சக்தி வாய்ந்த, ஆன்மிக அதிர்வுகள் நிறைந்த இக்கோவிலுக்கு துமகூரு, பெங்களூரு, மாண்டியா, மைசூரு, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சவுடேஸ்வரி அம்மன், பக்தர்கள் குறைகளை தீர்த்து வைக்கும் கருணை உள்ளம் கொண்ட தெய்வமாக வழிபடப்படுகிறார். தீராத நோய்கள், திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை, தொழில் நஷ்டத்தால் பாதிக்கப்படுவோர், பில்லி - சூனியம் போன்ற தீய சக்திகள் பாதிப்பில் இருந்து நீங்க, 90 நாட்கள் அம்மனை வேண்டி சங்கல்பம் செய்து கொள்கின்றனர். 90 நாட்களுக்குள் தங்கள் கோரிக்கைகளை அம்மனை நிறைவேற்றி வைப்பார் என்பது, பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . சாரதா பீடம் இது கோவில் மட்டும் இல்லை. சிருங்கேரி சாரதா பீடத்தின் கீழ் இயங்கும் மஹா சமஸ்தான மடமும் ஆகும். இங்கு தினமும் ஆன்மிக சொற்பொழிவுகள், ஹோமங்கள், வேத பாராயணங்கள் நடக்கின்றன. வெள்ளி, ஞாயிற்றுக் கிழமை அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுவதால், கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தசரா, நவராத்திரி இங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. நீண்ட துாரத்தில் இருந்து பக்தர்களால் தினமும் கோவிலுக்கு வர முடியாது என்பதால், முதல் நாள் கோவிலுக்கு சென்று பெயர், நட்சத்திரம், என்ன கோரிக்கை என்பதை அர்ச்சகரிடம் கூறி, அவர்கள் மூலம் 90 நாட்களுக்கு சிறப்பு சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பின், தினமும் வீட்டிலேயே அம்மன் படத்துக்கு விளக்கேற்றி வழிபட்டால் போதும். வெள்ளி, ஞாயிறு சங்கல்ப காலம் நிறைவு பெற்றதும் கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு நன்றி செலுத்தி வேண்டுதலை முறைப்படி நிறைவு செய்து கொள்ளலாம். 90 நாட்களுக்கு பதிலாக தொடர்ந்து 9 வாரங்களும் கோவிலுக்கு வரலாம். வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலுக்கு வந்து தேங்காய் கட்டி பிரதட்சணம் செய்து வேண்டுலை நிறைவேற்றி கொள்ளலாம். பொது தரிசனம் நாள் முழுதும் இருந்தாலும், மூலவரான சவுடேஸ்வரி அம்மனுக்கு காலை, மாலை நேரத்தில் மட்டும் விசேஷ பூஜை நடக்கும். ஆடை கட்டுப்பாடும் உள்ளது. ஆண்டுகள் வேஷ்டி, சட்டை அணிந்து செல்ல வேண்டும். பெண்கள் புடவை, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் போன்ற பாரம்பரிய உடைகள் மட்டும் அணிய வேண்டும். ஜீன்ஸ், டி சர்ட் அணிய அனுமதி இல்லை. கோவில் நடை தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும்; மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.