ஆர்.எஸ்.எஸ்.,சை கட்டுப்படுத்த, மாநில அரசு மறைமுகமாக முயற்சி
மாநில தகவல் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, சமீபத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், 'கல்வி நிறுவனங்கள், பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகள் நடத்துகிறது. இந்த அமைப்பு, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது. எனவே பொது இடங்களில், ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்திருந்தார். இது ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களுக்கும், பா.ஜ.,வினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. 'முடிந்தால் ஆர்.எஸ்.எஸ்.,க்கு தடை விதியுங்கள் பார்க்கலாம். ஹிந்து மதம் மற்றும் கலாசாரத்தை பாதுகாக்க போராடும் அமைப்பை, தடை செய்ய யாராலும் முடியாது' என, சவால் விடுத்தனர். இதற்கிடையே முதல்வர் சித்தராமையா தலைமையில், நேற்று முன் தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், எந்த சங்கங்கள், அமைப்புகளாக இருந்தாலும், அரசு நிறுவனங்கள், மைதானம், விளையாட்டு அரங்கங்கள் உட்பட, பொது இடங்களில், நிகழ்ச்சிகள் நடத்த முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்.,சை கட்டுப்படுத்த, மாநில அரசு மறைமுகமாக முயற்சிக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது. இதனால் கோபமடைந்துள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள், தங்கள் பலத்தை, அரசுக்கு காட்ட வேண்டும் என, உறுதி பூண்டுள்ளனர். மாநில தொழில் நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவின் சொந்த தொகுதியான, கலபுரகியின் சித்தாபுராவில் அரசின் அனுமதி பெறாமல், நாளை பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தன்னார்வ சேவகர்கள் பங்கேற்பர். அணிவகுப்புக்கு தேவையான முன்னேற்பாடுகள், ராஜ்யசபா பா.ஜ., உறுப்பினர் நாராயண பான்டகே தலைமையில் நடந்து வருகிறது. அன்றைய பேரணியில் தன்னார்வ தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்த அரசின் அனுமதி கட்டாயம் என்ற விதிமுறை அமலுக்கு வந்த பின், ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் அணிவகுப்பு இதுவாகும். அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு, பலத்தை காட்டும் நோக்கில் நடத்தப்படும். சித்தாபுராவின் முக்கியமான இடங்களில், அணிவகுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜ்யசபா உறுப்பினர் நாராயண பான்டகே கூறுகையில், “சித்தாபுராவின் முக்கியமான இடங்களில், அணிவகுப்பு நடத்தப்படும். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அணிவகுப்பு நடக்கும். இதற்காக உள்ளாட்சி உட்பட, யாரிடமும் அனுமதி பெறமாட்டோம். வரும் நாட்களிலும் அனுமதி பெறப்படாது. என்ன நடக்கிறது என, பார்த்துவிடலாம்,” என்றார். பா.ஜ. தலைவர்களும் கூட, ஆர்.எஸ்.எஸ்.,க்கு ஆதரவாக நின்றுள்ளனர். 'ஒரு சமுதாயத்தவரை கவரும் நோக்கில், தேசப்பற்றுள்ள அமைப்பை ஒடுக்க, அரசு முயற்சிக்கிறது. அரசு என்ன முயற்சி செய்தாலும், ஆர்.எஸ்.எஸ்., ஆலமரமாக வளர்வதை தடுக்க முடியாது. இந்த அமைப்பின் மீது கை வைத்தால், எரிந்து போவீர்கள்' என, எச்சரித்துள்ளனர்.
பி.டி.ஓ., 'சஸ்பெண்ட்'
ஆர்.எஸ்.எஸ்.,சின் நுாற்றாண்டு விழாவையொட்டி, ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசுகூரில் இம்மாதம் 12ம் தேதி, அணிவகுப்பு நடந்தது. இதில் ரோடலபன்டா கிராமத்தின் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றும் பிரவீன் குமார் பங்கேற்றார். இவர் லிங்கசுகூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., மானப்பா வஜ்ஜலின் ஆதரவாளர். அரசு ஊழியர்கள், இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது விதிமீறலாகும். எனவே பிரவீன் குமாரை 'சஸ்பெண்ட்' செய்து, பஞ்சாயத்துத் துறை கமிஷனர் அருந்ததி, நேற்று உத்தரவிட்டார். துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.