| ADDED : நவ 18, 2025 04:48 AM
கதக்: 'என் வீட்டின் முன் மோசமான சாலை, அதில் கழிவுநீர் ஓடுவது உட்பட பல பிரச்னைகளை நகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. இதனால், என்னால் விளையாட முடியவில்லை' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, 8ம் வகுப்பு மாணவர் கடிதம் எழுதி உள்ளார். கதக் மாவட்டம், பெட்டகேரி கிராமத்தில் மோசமான சாலை, கழிவுநீர், குடிநீர் உட்பட பல பிரச்னைகள் நிலவுகின்றன. மழைக் காலத்தில் சேறும், சகதியுமாக சாலை காட்சியளிக்கும். அதில் நடப்பதே சிரமம். கடந்த 20 ஆண்டுகளாக கிராமத்தினர் நரக வேதனை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து உள்ளூர் பிரதிநிதிகள், நகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் பயனில்லை. இதனால், விரக்தி அடைந்த இக்கிராமத்தின் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் சாய்ராம் என்ற மாணவர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: என் வீட்டின் முன் உள்ள சாலை, சேற்றால் நிரம்பி உள்ளது. இவ்வழியாக சென்ற பலர், சேற்றில் விழுந்துள்ளனர். இதனால் என்னால் விளையாட முடியவில்லை. தவிர, குடிநீரும் சரியான நேரத்தில் வருவதில்லை. நாங்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறோம். எனவே, சாலையை சரி செய்து, உரிய நேரத்தில் குடிநீர் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார். பிரதமருக்கே சிறுவன் கடிதம் எழுதிய செய்தியை கேட்ட கிராமத்தினர், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் தங்கள் கிராமத்துக்கு விமோசனம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.