அவப்பிரசாரம் செய்வதாக மாணவியர் போராட்டம்
பெங்களூரு: தங்களுக்கு எதிரான அவப்பிரசாரத்தால் கோபமடைந்து பெங்களூரு பல்கலைக்கழக மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு பல்கலைக்கழகத்தில், பட்டப் படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவியர், நேற்று முன் தினம் இரவு, திடீர் போராட்டம் நடத்தினர். பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஞானபாரதி வளாகத்தில், போராட்டம் நடத்தப்பட்டது. விடுதியில் போதுமான அடிப்படை வசதிகள் செய்யாமல், பல்கலைக்கழக நிர்வாகம் அலட்சியம் காட்டுகின்றனர். மாணவியரை பற்றி, அவப்பிரசாரம் செய்கின்றனர். வார்டனுடன், மாணவியருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக, விடுதி சூப்பர் வைசர் வதந்தி பரப்புகிறார். தவறான நோக்கத்துடன் செயல்படுகிறார். இது பற்றி புகார் அளித்தும், பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை என, மாணவியர் குற்றம்சாட்டினர். மாணவியர் விடுதி அருகில், சாலை மறியலில் ஈடுபட்டதால், சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை உருவானது. தகவலறிந்து அங்கு வந்த ஞானபாரதி போலீசார், மாணவியரை சமாதானம் செய்து, சூழ்நிலையை சரி செய்தனர்.