மன்னர் குடும்பத்துக்கு ரூ.3,400 கோடி உத்தரவை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்
பெங்களூரின் ஜெயமஹால், பல்லாரி சாலை விரிவாக்க பணிக்காக, மைசூரு மன்னர் குடும்பத்திற்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்து உள்ளது. இந்த 15 ஏக்கர் நிலத்திற்கு 1994ம் ஆண்டு சந்தை நிலவரப்படி 3,400 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று அரச குடும்பம் கேட்கிறது. ஆனால், அவ்வளவு பணம் தர முடியாது என்று அரசு கூறியது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. மனுவை நீதிபதிகள் அரவிந்த் குமார், சுந்தரேஷ் அமர்வு விசாரித்தது. மன்னர் குடும்பத்திற்கு 3,400 கோடி ரூபாய்க்கான டி.டி.ஆர்., எனும் மாற்றத்தக்க மேம்பாட்டு உரிமைகள் சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டனர். நிதி நெருக்கடி
இதற்கிடையில் அரண்மனை நிலத்தை அரசு பயன்படுத்தும், அவசர சட்டத்தை கொண்டு வந்து, அதற்கு கவர்னர் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனை எதிர்த்து மன்னர் குடும்பம் சார்பில், நீதிமன்ற அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.அரசின் முடிவால் கடுப்பான நீதிபதிகள், 3,400 கோடி ரூபாய்க்கான டி.டி.ஆர்., வழங்கியே தீர வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 3,400 கோடி ரூபாய்க்கான டி.டி.ஆர்.,ஐ உச்ச நீதிமன்றத்தில், அரசு சமர்பித்தது.இருப்பினும் உத்தரவை எதிர்த்து நீதிபதிகள் சூரியகாந்த், தீபங்கர் தத்தா, கோடீஸ்வர் சிங் அமர்வில், கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நேற்று மனு மீது விசாரணை நடந்தது.அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் கபில் சிபல், சசிகிரண் ஷெட்டி, ராஜிவ் தவான் ஆகியோர் வாதாடுகையில், 'மன்னர் குடும்பத்தினர் கேட்கும் 3,400 கோடி ரூபாய் பணத்தை கொடுத்தால், அரசிற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும்.அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்பதால், சாலையை விரிவாக்கும் திட்டத்தை அரசு கைவிட முடிவு செய்து உள்ளது. அரண்மனை நிலத்தை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்த, அரசு அவசர சட்டம் கொண்டு வந்து உள்ளது' என்றனர். ஒத்திவைப்பு
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கங்குலி, ராகேஷ் திவேதி, மாதவி திவான், கோபால் சங்கரநாராயண் வாதாடுகையில், 'அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 3,400 கோடி ரூபாய்க்கான டி.டி.ஆர்.,ஐ அரசு வழங்க வேண்டும்' என்றும் கூறினர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், டி.டி.ஆர்., தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவை நிறுத்தி வைத்தனர். அரசு தாக்கல் செய்த டி.டி.ஆர்., சான்றிதழ்கள் நீதிமன்ற பதிவேட்டில் டிபாசிட் செய்யப்படும். தற்போதைக்கு அந்த சான்றிதழ்கள் பயன்படுத்தப்படாது. யாருக்கும் மாற்றப்படாதது என்றும் நீதிபதிகள் கூறினர். மனு மீதான அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் - நமது நிருபர் -.