உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு பயங்கரவாதிகளிடம் விசாரணை 

குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு பயங்கரவாதிகளிடம் விசாரணை 

பெங்களூரு : மங்களூரு குக்கர் குண்டு வெடித்த வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பயங்கரவாதிகள் இருவரிடம், ஈ.டி., அதிகாரிகள் விசாரித்து உள்ளனர். மங்களூரில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த வழக்கில் ஷிவமொக்காவை சேர்ந்த முகமது ஷாரிக், யாசின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்கிறது. கைதான முகமது ஷாரிக், யாசினுக்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டது பற்றி, ஈ.டி., எனும் அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது. கடந்த 5ம் தேதி யாசின் வங்கிக் கணக்கில் இருந்த 29,176 ரூபாயை, ஈ.டி., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தில், குண்டு தயாரிக்க தேவையான பொருட்களை இருவரும் வாங்கியதும் தெரிந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற ஈ.டி., அதிகாரிகள், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக முகமது ஷாரிக், யாசினிடம், வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது குறித்து விசாரித்து உள்ளனர். ஒரு சில கேள்விகளுக்கு பதில் அளித்த இருவரும், பல கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி