தங்கவயல் செக் போஸ்ட்
உத்தரவை நம்பலாமா?
மா ட்டு வண்டி நிலையம் அகற்றுவதில் கட்டடம் இடிக்கும் வீராதி வீரர்கள் வெற்றி பெற்றிருக்காங்க. அந்த மாட்டு வண்டி நிலையத்தாருக்கு புதிய வணிக வளாகம் கட்டி முடித்ததும் தலா ஒரு கடை தருவதாக வாக்குறுதி கொடுத்திருக்காங்க. இது வாய் மொழி உத்தரவாக இருக்குதே தவிர, எழுத்துப்பூர்வமாக இதுவரை கொடுக்கவில்லை. வாய்மொழி வாக்குறுதிகளை நிறைவேற்றுவாங்களா என்ற கேள்வி நகரில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, ரா.பேட்டை பஸ் நிலையம், வடக்கு பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி வணிக வளாகத்தில், 30 கடைகளை பல ஆண்டா சும்மா மூடி வெச்சிருக்காங்க. அதில் ஒரு கடையை கொடுத்திருக்கலாமே. அப்படி கொடுத்தால் தான் என்ன பாதிப்பு ஏற்பட போகுது? புல் மார்க்கெட் கடைகளை இடித்தால் தான், நகரம் வளர்ச்சி அடையும் என்கின்றனரே. நகராட்சி அருகே, சிறுவர் பூங்கா பின்புறம் உள்ள முனிசி., காலி நிலத்தை என்ன செய்ய போறாங்களோ அல்லது அதை மாபியா கும்பலுக்கு தாரை வார்ப்பார்களோ?
வேலி எங்கே?
மு னிசி.,க்கு சொந்தமான காலி நிலம் எங்கு இருக்குதோ, அங்கெல்லாம் வேலி அமைக்க வேணும்னு கவுன்சிலர்கள் வலியுறுத்தினாங்க. ஆனால், அதை ஒரு பொருட்டாகவே யாரும் மதிக்கல; அலட்சியம் காட்டுறாங்க. முனிசி.,க்கு சொந்தமாக மா.குப்பம், ராஜர்ஸ் கேம்ப் பகுதியில், உரிகம் பேட்டையில், சாம்ராஜ்பேட்டை, மஸ்கம் பகுதிகளில் பல ஏக்கர் நிலம் இருப்பதாக சொல்றாங்க. ஆனால் காலி நிலமெல்லாம் மாடி வீடுகளாக தான் இருக்குதாம். ஏரி நிலமெல்லாம் கூட, 'பட்டா'வாக மாற்றி பணம் ஆக்கிட்டாங்க. ஆனாலும் வேலி அமைக்க முனிசி., முன் வரவில்லை. இதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்னவோ?
மீண்டும் திறக்கப்படுமா?
ஒ ரு வழியாக பஸ் நிலையத்தில் மதுபான கடைகளுக்கு மூடு விழா நடத்திட்டாங்க. ஆனால், மீண்டும் அதே இடத்தில் மதுபான கடைகளை திறப்பதற்கு, தலைவர்களை அணுகி முயற்சித்து வர்ராங்க. தேவையான டொனேஷன் தருவதாக பேரம் நடந்திருக்குது. ஆனால், ஊரு கெட்டுப் போகும்; பேரு கெட்டுப் போகும்னு அட்வைஸ் பண்ணியிருக்காங்க. பஸ் நிலையத்தில் மதுபானம் இருப்பது சரியில்லை என்றால் பள்ளிக்கூடம், கோவில், குடியிருப்பு பகுதி, ஏன் முனிசி., ஆணையர் தங்கியிருக்கும் இடத்தின் அருகில் இருப்பது சரியா? அதை எப்போ காலி செய்யப் போறீங்கன்னு சிலர் போட்டுக் கொடுத்திருக்காங்க. இதனால் ஜூனியர் கல்லுாரி அருகே உள்ள மதுபான கடைக்கும் முனிசி., பார்வை பட்டிருக்குது.
தாகம் தீர்க்கப்படுமா ?
ப. பேட்டை, மாலுார், கோலார் என மூன்று தாலுகாக்களின் குடிநீருக்காக எரகோள் அணை கட்டப்பட்டது. இது கோல்டு சிட்டிக்கும் கிடைக்கும் என முதல்வரே உறுதி அளித்தார். ஆனால், அவரு மறந்துட்டாரு. கோல்டு சிட்டிக்காகவே ஏற்படுத்தின பேத்தமங்களா ஏரி நிரம்பி தண்ணீர் வீணாகி வெளியேறுது. அதையாவது கிடைக்க செய்யலாமே? பேத்தமங்களா தண்ணீர் கெடச்சி 20 ஆண்டு கடந்து போனது. கோல்டு சிட்டிக்காரங்க யாருமே குடிநீர் கேட்கலயேன்னு ஒரு மூத்த ஆபீசரு கூறியிருக்காரு. அப்படின்னா... யாரும் கேட்கலன்னா குடிநீர் கொடுக்க கூடாதான்னு மாவட்ட கலெக்டர் நெத்தியடி கொடுத்திருக்காரு. அவரோட முயற்சியில் கோல்டு சிட்டிக்கு தண்ணீர் கிடைக்க போவதாக நம்பிக்கை ஏற்பட்டிருக்குது.