அரசுடைமை ஆனது தங்கவயல் கோவில்
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் அமைந்துள்ள ராமலிங்கேஸ்வரர் கோவிலை, கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத்துறை ஏற்றுக் கொண்டது.இக்கோவிலை ஜெகதீஷ் என்பவர் நிர்வகித்து வந்தார். இக்கோவில் கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ளதால், அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.இதன் பேரில், கர்நாடக அரசு விசாரணை நடத்தியது. ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் உள்ள இடத்தை சர்வே செய்தனர். அரசின் லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில் வளாகத்தில் தான் இக்கோவிலும் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.எனவே, இக்கோவிலை கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறையே ஏற்றுக் கொள்வதாக அதன் மாநில செயலர் செல்வமணி தெரிவித்துள்ளார்.ராமலிங்கேஸ்வரர் கோவிலில், 50 ஆண்டுகளாக மஹா சிவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து ஒன்பது நாட்கள் பிரம்மோத்சவம் நடத்துவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.