உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜாதிவாரி மறு கணக்கெடுப்புக்கு அரசு செலவிடும் தொகை... ரூ.420 கோடி!: சரியான தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்கு முதல்வர் அழைப்பு

ஜாதிவாரி மறு கணக்கெடுப்புக்கு அரசு செலவிடும் தொகை... ரூ.420 கோடி!: சரியான தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்கு முதல்வர் அழைப்பு

கடந்த 2014ல், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, மக்கள்தொகை அடிப்படையில், மக்களுக்கு சலுகைகள், இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இதுகுறித்து, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணைய தலைவர் காந்தராஜு மூலமாக ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டது. அறிக்கை கிடைப்பதற்குள் அரசு மாறியதால், ஆய்வு கிடப்பில் போடப்பட்டது. ஆணைய தலைவரும் மாறி, ஜெயபிரகாஷ் ஹெக்டே பொறுப்புக்கு வந்தார். 2023ல், மீண்டும் காங்கிரஸ் அரசு வந்தது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடரப்பட்டது. பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் ஹெக்டே, கணக்கெடுப்பை முடித்து, நடப்பாண்டு மே மாதம், அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் சிறுபான்மையினர், எஸ்.சி., பிரிவினர் எண்ணிக்கையை அதிகமாகவும், லிங்காயத், ஒக்கலிகர் குறைவாகவும் இருப்பதாக தகவல் வெளியானது. அறிக்கைக்கு ஆளுங்கட்சி லிங்காயத் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களுமே எதிர்ப்புத் தெரிவித்தனர். அறிக்கையை நிராகரிக்கும்படி வலியுறுத்தினர். ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையால், மாநிலத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. அறிக்கையை ஏற்கக் கூடாது என நெருக்கடி உருவானது. மாநிலத்தில் ஏற்பட்ட குழப்பத்தை கவனித்த, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், புதிதாக கணக்கெடுப்பு நடத்தும்படி உத்தரவிட்டார். இதன்படி மறு ஆய்வுக்கு அரசு உத்தரவிட்டது. வீடு வீடாக சென்று, மக்களின் ஜாதி, கல்வித்தகுதி, பொருளாதார நிலை உட்பட, அனைத்து தகவல்களும் சேகரிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 22ல் ஆய்வு துவங்குகிறது. அக்டோபர் 7ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதுதொடர்பாக, பெங்களூரின் முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் சித்தராமையா, நேற்று ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி: மக்களின் கல்வி, பொருளாதார சூழ்நிலையை தெரிந்து கொள்ளும் நோக்கில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இம்மாதம் 22ம் தேதி முதல், அக்டோபர் 7 வரை நடக்கும். ஆய்வு நடத்த வரும் ஊழியர்களுக்கு, மக்கள் தங்கள் பற்றிய தகவல்களை தவறாமல் தெரிவித்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநிலத்தில் இரண்டு கோடி வீடுகள் உள்ளன. ஏழு கோடி மக்கள் உள்ளனர். அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்தப்படும். தசரா விடுமுறை நேரத்தில், 1.75 லட்சம் ஆசிரியர்கள் ஆய்வுக்கு பயன்படுத்தப்படுவர். ஒவ்வொரு ஆசிரியருக்கும் 120 முதல் 150 வீடுகளை ஆய்வு செய்யும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஆஷா ஊழியர்களுக்கு கவுரவ நிதி வழங்க, 375 கோடி ரூபாய் செலவிடப்படும். ஆய்வுக்கு முதற்கட்டமாக 420 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்பட்டால், கூடுதல் நிதி வழங்கப்படும். இதற்கு முன்பு காந்தராஜு ஆணையம் நடத்திய ஆய்வுக்கு, 165 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அந்த அறிக்கை காலாவதியானதாக கருதி நிராகரிக்கப்பட்டது. தற்போது மறு ஆய்வு நடத்தப்படுகிறது. அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு உள்ளது. ஆர்.ஆர்.எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது. மீட்டர் ரீடர்கள் ஆர்.ஆர்.எண் அடிப்படையில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதன்பின் ஆசிரியர்கள், ஆஷா ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்துவர். கேள்விகள் எழுப்பி குறிப்பிட்ட படிவத்தில், மக்களின் விபரங்களை நிரப்புவர். கல்வி அறிவு உள்ளவர்கள், படிவத்தை படித்து பார்த்து பதில் அளிக்க உதவியாக இருக்கும். இதற்கு முன்பு காந்தராஜு ஆணையம், 54 கேள்விகளை எழுப்பியது. தற்போதைய ஆய்வில் 60 கேள்விகள் கேட்கப்படும். ஆய்வின்போது தங்களின் ஜாதியை குறிப்பிட தர்ம சங்கடமாக உணர்வோருக்கு மாற்று வழிகள் உள்ளன. ஆணையத்தின் இணைய தளத்தில் தகவல் தெரிவிக்கலாம். அல்லது ஆணையத்தின் உதவி எண் 80507 70004ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மதமாற்றம் செய்து கொண்டவர்கள், தற்போது எந்த மதத்தை பின்பற்றுகின்றனரோ, அந்த மதத்தை குறிப்பிட வேண்டும். ஜாதி பெயரை கூற தயங்குவோருக்கு, தெளிவுபடுத்தி பதில் பெறுவது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டின் ஆதார் கார்டு, ரேஷன்கார்டு, மொபைல் எண்களுடன் இணைக்கப்படும். யு.ஹெச்.ஐ.டி., எண் இல்லாத வீடுகளையும் ஆய்வு நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக 100 ரூபாய் கவுரவ நிதி வழங்கப்படும். மத்திய அரசும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இப்போது ஜாதி பெயரை கூற தயங்கினால், மத்திய அரசு ஆய்வு நடத்தும்போது, கட்டாயம் கூற வேண்டும். மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டுமே நடத்துகிறது. மக்களின் கல்வி, பொருளாதார சூழ்நிலை தொடர்பான தகவலை சேகரிக்கவில்லை. ஏற்றத்தாழ்வுகளை சரி செய்து, சமத்துவத்தை ஏற்படுத்த, இந்த ஆய்வு அவசியம். லிங்காயத்துகள், வீர சைவர்கள் எந்த மதம் என்பதை, ஆய்வின்போது குறிப்பிடலாம். நாங்கள் கல்வி, பொருளாதாரம் குறித்து ஆய்வு நடத்துகிறோம். மதங்களை முடிவு செய்வதற்காக அல்ல. 78 ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அம்பேத்கரின் கொள்கைப்படி சம உரிமை, சமத்துவத்தை கொண்டு வருவதே, ஆய்வின் நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !