சிக்கபானவாரா: 'வந்தே பாரத்' ரயில் மோதி, நர்சிங் கல்லுாரி மாணவர், மாணவி உயிரிழந்தனர். காதலர்களான இவர்கள், தற்கொலை செய்து கொண்டனரா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. கேரளாவை சேர்ந்தவர்கள் ஜஸ்டின் ஜோசப், 20, ஸ்டெர்லின் எலிஜா, 19. இவர்கள் பெங்களூரின் சிக்கபானவாரா அருகில் ஹெசரகட்டா சாலையில் உள்ள, சப்தகிரி நர்சிங் கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தனர். ஒரே கல்லுாரியில் படித்ததால், இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. ஜஸ்டின் ஜோசப்பும், ஸ்டெர்லின் எலிஜாவும், நேற்று முன்தினம் காலை தேவாலயத்துக்கு சென்று, பிரார்த்தனை செய்தனர். மதியம் 2:30 மணியளவில், சிக்கபானவாரா ரயில் நிலையத்துக்கு வந்தனர். பி.ஜி.,க்கு செல்வதற்காக, இருவரும் தண்டவாளத்தை கடந்து சென்றபோது, பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு சென்ற 'வந்தே பாரத்' ரயில் மோதி உயிரிழந்தனர். யஷ்வந்த்பூர் ரயில்வே போலீசார், இருவரின் உடல்களை மீட்டு, விசாரணையை துவக்கியுள்ளனர். சம்பவ இடத்தின் கண்காணிப்பு கேமராவை, ஆய்வு செய்தபோது, இருவரும் தண்டவாளத்தின் மீது நின்றிருப்பது தெரிந்தது. எனவே இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். காதலர்களின் குடும்பத்தினருக்கு, தகவல் கொடுத்துள்ளனர்.