காசியில் புதிதாக கர்நாடக சத்திரம் கட்ட அனுமதி கேட்கிறது அறநிலைய துறை
பெங்களூரு: காசியில் புதிதாக கர்நாடக சத்திரம் கட்ட, கர்நாடக அரசிடம் ஹிந்து அறநிலைய துறை அனுமதி கோரியுள்ளது.காசிக்கு செல்லும், கர்நாடக பக்தர்களின் வசதிக்காக, மைசூரு மஹாராஜா நால்வடி கிருஷ்ணராஜ உடையார், 97 ஆண்டுகளுக்கு முன்பு, அங்கு கர்நாடக சத்திரம் கட்டினார். காசியின் கங்கை ஆற்றங்கரையில் கட்டப்பட்ட, பழமையான இக்கட்டடம், தற்போது சிதிலமடைந்துள்ளது. இதை புதுப்பிக்க பட்ஜெட்டில், கர்நாடக அரசு 5 கோடி ரூபாய் அறிவித்தது. ஆனால், இன்னும் நிதி வழங்கவில்லை.இதுகுறித்து, அறநிலைய துறை அதிகாரிகள் கூறியதாவது:காசி, கைலாச மானசசரோவர், ஜார்தாம் யாத்திரை செல்லும், கர்நாடக பக்தர்களுக்கு மாநில அரசு 5,000 ரூபாய் மானியம் வழங்குகிறது.இதனால் காசிக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் காசியில் உள்ள கர்நாடக சத்திரத்தில் தங்குகின்றனர்.சத்திரத்தில் ஒரு குடும்பத்தினர், குறைந்தபட்சம் இரண்டு அறைகளை முன்பதிவு செய்து கொள்ளவும், அதிகபட்சம் மூன்று நாட்கள் வரை தங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.சத்திரம் சிதிலமடைந்ததால், யாத்திரிகர்கள் தங்க வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.கர்நாடக சத்திரம் அருகிலேயே, ஹரிசந்திரா காட் உள்ளது. அங்கு நடக்கும் பணிகளால், நம் சத்திர வளாக சுவர் சேதமடைந்தது.தற்போதுள்ள இரண்டு மாடிகள் கொண்ட சத்திரம் போதுமானதாக இல்லை. மைசூரு மஹாராஜா கட்டிய இந்த சத்திரம், நுாற்றாண்டை நெருங்குகிறது. கட்டடத்தை இடித்துவிட்டு, அதிக மாடிகள் கொண்ட புதிய கட்டடம் கட்ட வேண்டும்.காசியில் 18 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்ட திட்டம் வகுத்துள்ளோம். அரசிடம் தாக்கல் செய்து, அனுமதி கேட்டுள்ளோம். இப்போதுள்ள அதே வடிவத்தில், பழமை மாறாமல் கட்ட முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.