உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நாட்டுக்கு பெருமை சேர்க்கும் பெங்களூரில் முதல் ஏ.ஐ., நகரம் 9,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த திட்டம்: 19 ஆண்டுகளுக்கு முந்தைய குமாரசாமியின் கனவு

நாட்டுக்கு பெருமை சேர்க்கும் பெங்களூரில் முதல் ஏ.ஐ., நகரம் 9,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த திட்டம்: 19 ஆண்டுகளுக்கு முந்தைய குமாரசாமியின் கனவு

பெங்களூரு: ''நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், 9,000 ஏக்கர் நிலத்தில் பெங்களூரில் முதல் ஏ.ஐ., நகரம் அமைக்கப்படுகிறது,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். இதன் மூலம், 19 ஆண்டுகளுக்கு முன்பு குமாரசாமி கண்ட கனவு நனவாக உள்ளது. இதுதொடர்பாக ராம்நகர் கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது: ஜி.பி.ஐ.டி., எனும் கிரேட்டர் பெங்களூரு ஒருங்கிணைந்த புறநகர் மூலம் நாட்டின் முதல் ஏ.ஐ., நகரம் உருவாக்க அரசு முடிவு செய்து உள்ளது. 9,000 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நகரம் அமையும். எதிர்காலத்தில் பெங்களூரின் மத்திய வணிக மாவட்டமாக மாறும். இந்நகரம் 'வேலை - வாழ்விடம் - விளையாட்டு' மாடலில் வடிவமைக்கப்படும். 2,000 ஏக்கர் இந்நகரம் உருவாவதால், வர்த்தகம், பொருளாதாரம் உயரும். சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க ஏ.ஐ., சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்காக 2,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஒதுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக அமையும். இந்நகரம், பிற முக்கிய சாலைகளுடன் இணைக்க 300 மீட்டர் அகலத்திலான புதிய வர்த்தக காரிடார்கள் அமைக்கப்படும். அந்த வகையில், 9 கி.மீ., துாரத்தில் எஸ்.டி.ஆர்.ஆர்., எனும் சாட்டிலைன் டவுன் வட்ட சாலையுடனும்; 11 துாரத்தில் நைஸ் சாலையுடனும்; 5 கி.மீ., துாரத்தில் மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையுடனும்; 2.2 கி.மீ., துாரத்தில் பெங்களூரு - திண்டுக்கல் நெடுஞ்சாலையுடனும் இணைக்கப்படும். வரும் நாட்களில் மெட்ரோ ரயில் மூலமும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர் நபர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொள்கையால், ஏ.ஐ., மற்றும் ஐ.டி., சேவை துறைகளில் லட்சக்கணக்கில் வேலை வாய்ப்புகள் உருவாகும். கிரேட்டர் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திறமையை அதிகரிக்கும் மையம் உருவாக்கப்படும். இந்நகரம், பெங்களூருக்கு அருகே அதிகளவில் வர்த்தகம் மையமாக மாறும். 50:50 விகிதம் இந்நகரம் அமைவதற்காக நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு 2013 சட்டப்படி, நிதி வழங்கப்படும். பிரதான சாலைகள் அருகில் நிலம் வைத்திருப்போருக்கு உரிய நிவாரணம் வழங்குவதை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும். விவசாயிகளுக்கு அநீதி ஏற்படாத வகையில், மாநிலத்தில் உள்ள எந்த மேம்பாட்டு ஆணையமும் எடுக்க முடியாத ஒரு முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். பணம் எதுவும் பெறாமல், நிலத்தை பகிர்ந்து கொள்ளும் விவசாயிகளுக்கு, 50:50 விகிதத்தில் மேம்படுத்தப்பட்ட நிலம் வழங்கப்படும். கூடுதலாக, இறுதி அறிவிப்பு வெளியாகும் தேதியில் இருந்து, நிதி / மேம்பாடு செய்யப்பட்ட நிலத்துக்கான இழப்பீடு வழங்கப்படும் வரை, விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக, ஏக்கருக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வறண்ட நில உரிமையாளர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய்; நெல் நில உரிமையாளர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய்; பிரிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய்; நிலம் இல்லாத தொழிலாளர்களும், நிலத்துக்கான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இது தவிர, வருமான வரி விலக்கு, முத்திரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்நகரை இணைக்க நிலம் கொடுப்பவர்களுக்கு இதுபோன்று இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகள் ஆவணங்களுடன் இழப்பீடு கோரி விண்ணப்பித்தால், மூன்று நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும். சம்மதம் நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்காக இப்பகுதி மக்கள், எங்களை நினைவில் கொள்வர். இந்த சந்தர்ப்பத்தில் நிவாரணம் கோரி மனுத் தாக்கல் செய்த என் சகோதரி அனிதா குமாரசாமி, நிகில் குமாரசாமி ஆகியோரையும் வாழ்த்துகிறேன். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று 78 சதவீத விவசாயிகள், தங்கள் நிலத்தை கொடுக்க முன்வந்துள்ளனர். 18 சதவீத விவசாயிகள் மட்டுமே கையகப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். 'நான் தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுக்க முடியாது. சட்டத்துக்கு உட்பட்டு நான் பணியாற்ற வேண்டும். எனவே, தயவு செய்து, என்னை மன்னித்துவிடுங்கள்' என்று கைக்கூப்பி கேட்டுக் கொள்கிறேன். இந்த அறிவிப்பின் கீழ் வரும் பகுதியில் உள்ள குடியிருப்புகள் பாதுகாக்கப்படும்; நிலம் கையகப்படுத்தப்படாது. தேவகவுடா மற்றும் பிறரின் காலத்தில் பிடதி தொழில்துறை டவுன்ஷிப் உருவாக்கப்பட்ட போது, நிலம் கையகப்படுத்தும் செயல்பாட்டில், ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. பின்னர் அது, 10 லட்சம் ரூபாயாக மாறியது. என் பதவிக் காலத்தில், பிடதி டவுன்ஷிப் நிலம் அறிவிக்கப்படாது. அதேவேளையில், விவசாயிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க முயற்சிப்பேன். ஒருங்கிணைந்த புறநகர் பகுதிக்காக, ஒன்பது கிராமங்களில் 8,493 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும். அதில், 750 ஏக்கர் அரசுக்கு சொந்தமானது. 6,731 ஏக்கர் தனியாருக்கு சொந்தமானது. மீதமுள்ள 1,012 ஏக்கர், நீர்நிலைகள். இத்திட்டத்துக்காக, 2,950 கோடி ரூபாய் பி.எம்.ஆர்.டி.சி., எனும் பெங்களூரு மெட்ரோபாலிடன் மண்டல மேம்பாட்டு ஆணையம் மூலமாகவும்; 17,500 கோடி ரூபாய் நிதி நிறுவனங்கள் மூலமாகவும், அரசின் வாக்குறுதியுடன் சேர்க்கப்படும். 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஆதாரங்கள் நிறைவடைந்த பின், நிலம் கையகப்படுத்தும் செயல்முறை மற்றும் இழப்பீட்டு வினியோகம் துவங்கப்படும். கடந்த 2013 சட்டத்தின்படி, இத்திட்டத்தின் கீழ் உள்ள நில உரிமையாளர்களுக்கு, மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு கொள்கை செயல்படுத்தப்பட்டு உள்ளது. பைரமங்களா ஏரியை புத்துயிர் பெறுவதற்காக, மூன்றாம் நிலை சுத்திகரிப்பு மூலம், தண்ணீரை நிரப்ப 2,000 கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ளப்படும். 100 எம்.எல்.டி., சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும். நிலைத்து நிற்கும் இத்திட்டம் குறித்து சில விவசாயிகள் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். ஆனால் பா.ஜ., அரசும் சரி, குமாரசாமி அரசும் சரி, இத்திட்டத்தை வாபஸ் பெறவில்லை. அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், அது மறு அறிவிப்பு செய்யாமல் நீக்கப்பட்டால், பல சிக்கல்கள் எழும். எனவே, அதை அந்த அறிவிப்பை திரும்பப் பெற மாட்டேன். விமர்சனங்கள் இறந்துவிடும்; வேலை நிலைத்து நிற்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். இவ்வாறு அவர் கூறினார்.

26 கிராமங்கள் மேம்பாடு

கிரேட்டர் பெங்களூரு ஒருங்கிணைந்த டவுன்ஷிப் திட்டத்தில், 26 கிராமங்கள் நகர்ப்புற முறையில் மேம்படுத்தப்பட உள்ளன. பள்ளிகள், கிராமத்தை சுற்றி 50 மீட்டர் வட்டச்சாலை, கர்நாடக பப்ளிக் பள்ளி, நவீன மருத்துவமனை, நிலத்தடி மின்சார கேபிள்கள், கழிவுநீர் அமைப்பு, விளையாட்டு மைதானம், மத இடங்கள் மற்றும் பிற வசதிகள் மேம்பாடு செய்யப்படும். இந்த நகரம் வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி, கலாசாரம் போன்றவற்றை உள்ளடக்கிய மாதிரியில் உருவாக்கப்படும். 1,100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பூங்காக்கள், மைதானங்கள் கட்டப்பட்டு, பசுமையான, நிலையான நகரமாக மாறும்.

திட்டம் - நடைமுறைக்கு வந்த வரலாறு

பிடதி ஸ்மார்ட் சிட்டியாக முன்னர் நிறுவப்பட்டது. தற்போது கிரேட்டர் பெங்களூரு ஒருங்கிணைந்த டவுன்ஷிப்பாக அரசு அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் குமாரசாமி, 2006 அக்., 18ல் ராம்நகர், சோலுார், நந்தகுடி, சாத்தனுார், பிடதி ஆகிய இடங்களில், பொது - தனியார் பங்களிப்பு மாதிரியில் டவுன்ஷிப் உருவாக்க முடிவு செய்திருந்தார். இதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டது. இதுதொடர்பாக 2007 அக்., 26ல், டி.எல்.எப்., நிறுவனத்துக்கு பணி உத்தரவு வழங்கினார். எடியூரப்பா முதல்வரான பின், 2009 ஏப்., 29ல் இந்த உத்தரவை திரும்பப் பெற்றார். 2020 ஜூன் 1ல் இரண்டாவது முறையாக உலகளாவிய டெண்டர் அழைக்கப்பட்டது. 2011 நவ., 3ல், சதானந்த கவுடா முதல்வராக இருந்தபோது, நகர திட்டமிடுதலுக்கு உத்தரவிட்டார். மஹா பெங்களூரு பிடதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 2016 ஜூன் 3ல், சித்தராமையா அரசு, 38 கிராமங்களை பிடதியுடன் இணைத்தது. 2020 ஜன., 6, தொழிற்பகுதிக்காக, எடியூரப்பா அரசு, 910 ஏக்கர் நிலத்தை கே.ஐ.ஏ.டி.பி.,க்கு வழங்கினார். நான் அதிகாரத்துக்கு வந்த போது, 2023 நவ., 18 ல், இதை கிரேட்டர் பெங்களூரு மேம்பாட்டு ஆணையமாக மாற்றினேன். 2025 பிப்., 10 ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பிடதியில் ஒருங்கிணைந்து டவுன்ஷிப் கட்ட ஒப்புதல் பெறப்பட்டது. இது தொடர்பாக 2025 மார்ச் 12ல் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்