போவி பிரதான ஜாதியே அரசுக்கு வலியுறுத்தல்
பெங்களூரு: ''போவி என்பது ஒரு துணை ஜாதி இல்லை, அது ஒரு பிரதான ஜாதியே,'' என போவி மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் சீதாராம் கூறி உள்ளார்.பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக எடுக்கப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பில், ஆதி கர்நாடகர், ஆதி ஆந்திரர், ஆதி திராவிடர் ஆகியவை பிரதான ஜாதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், போவி சமூகம் மட்டும் துணை ஜாதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இது ஒட்டு மொத்த போவி சமூகத்திற்கு அநீதியை இழைத்து உள்ளது. துணை ஜாதிப்பிரிவின் கீழ் 69 ஜாதிகள் உள்ளன. இதில் போவியையும் இணைப்பது சரியான முடிவு அல்ல. இது எங்களிடையே பாகுபாடுகளை ஏற்படுத்துகிறது.பல இடங்களில் கணக்கெடுப்பாளர்கள் போவி சமூகத்தை, ஆதி கர்நாடகர் ஜாதிக்குள் வரும் துணை ஜாதியாக பதிவு செய்து உள்ளனர். எனவே, தரவுகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும். போவி சமூகத்தை பிரதான ஜாதியாக அறிவிக்க வேண்டும்.போவி சமூகத்திற்கு அநீதியை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போவி சமூகத்தினரின் ரேஷன் கார்டுகளில் பட்டியல் ஜாதியினர் என குறிப்பிடுவதற்கு பதிலாக, பட்டியல் பழங்குடியினர் என உணவு வழங்கல் துறை அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.இவர்கள் கணக்கெடுக்க வரும் அதிகாரிகளிடம் தங்கள் ஜாதி சான்றிதழ், வாக்காளர் அட்டை போன்றவற்றை காண்பித்து திருத்தங்களை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் போவி சமூகத்தினருக்கு இழைக்கப்படும் அநீதி தவிர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.