சாலையில் குப்பை வீசுவோர் வீட்டின் முன் கொட்ட முடிவு
பெங்களூரு: சாலையில் குப்பையை வீசுவோரின் வீட்டின் முன், குப்பை குவியலை கொட்ட ஜி.பி.ஏ., முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரில் தெரு முனைகள், சாலை ஓரங்கள் குப்பையாக காட்சி அளிக்கின்றன. குப்பையை சாலை ஓரங்களில் பலரும் வீசி செல்வதே காரணமாக உள்ளது. இதை தடுக்க ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகள் பல நடவடிக்கைள் எடுத்தாலும், எந்த நடவடிக்கையும் பலன் அளிக்கவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த ஜி.பி.ஏ., நிர்வாகத்தினர் குப்பையை தெருக்களில் வீசுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர். அதாவது, குப்பையை சாலையில் வீசுவோரை, மார்ஷல்கள் மறைமுகமாக வீடியோ எடுப்பர். இதன் மூலம் அந்நபரின் வீடு அடையாளம் காணப்படும். பின், குப்பையை வீசிய நபரின் வீட்டுக்கு போலீசாருடன், மார்ஷல்கள் செல்வர். அவரின் வீட்டுக்கு முன் குப்பை குவியலை கொட்டுவர். குப்பையை வீசிய நபருக்கு 2,000 முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கு முன்பு குப்பையை கொட்டுவது வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் இதன் மூலம், வீடியோவை பார்ப்போர், சாலையில் குப்பை கொட்டக்கூடாது என அச்சம் அடைவ ர். இப்படி ஒரு அதிரடி நடவடிக்கை மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஜி.பி.ஏ., முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.