உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கொடுத்த கடனை கேட்ட முதியவரை கொன்ற மூவர் கைது

 கொடுத்த கடனை கேட்ட முதியவரை கொன்ற மூவர் கைது

சாம்ராஜ்நகர்: கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் முதியவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், கம்மரஹள்ளி கிராமத்தில் வசித்தவர் சாமி, 70. கடந்த 10ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர், இரவாகியும் வீடு திரும்பவில்லை. பீதியடைந்த மனைவி, சாமியின் அண்ணன் மகன் சோமாவுக்கு போன் செய்து, விஷயத்தை கூறினார். சோமாவும் தன் சித்தப்பாவை தேடியபோது, கம்மரஹள்ளி கிராமத்தின், குண்டுலுபேட் தேசிய நெடுஞ்சாலை அருகில் கொலையாகி கிடப்பது தெரிந்தது. இந்த விஷயத்தை சித்தியிடம் கூறினார். தகவலறிந்து பேகூரு போலீசாரும் அங்கு வந்தனர். சாமியின் கழுத்தில் துண்டு போட்டு இறுக்கி, கொலை செய்திருப்பது தெரிந்தது. கணவரின் உடலை கண்ட மனைவி, தன் கணவர் அணிந்திருந்த 100 கிராமுக்கும் அதிகமான எடையுள்ள தங்க நகைகள் இல்லாததை கவனித்து, போலீசாரிடம் கூறினார். துண்டும் அவருடையது அல்ல என்பதை தெரிவித்தார். நகைக்காக முதியவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகித்தனர். உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். பரசிவமூர்த்தி, 40, சித்தராஜு, 36, மகேஷ், 35, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். முதியவரிடம் பரசிவமூர்த்தி, 10,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதை திருப்பித் தரும்படி கேட்டதால், தன் நண்பர்கள் சித்தராஜு, மகேஷுடன் சேர்ந்து கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்தது, விசாரணையில் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி