பெங்களூரில் மூன்று நாட்கள் குடிநீர் நிறுத்தம்
பெங்களூரு: பராமரிப்புப் பணிகள், குடிநீர் டேங்கர்களை சுத்தம் செய்யும் பணிகள் நடப்பதால், நாளை முதல் 17ம் தேதி வரை காவிரி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுதொடர்பாக, பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் கூறியதாவது: பெங்களூரு நகரில் வசிக்கும் மக்களுக்கு, எந்த இடையூறும் இல்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. காவிரி குடிநீர் திட்டத்தின் கீழ், பணிகள் நடக்கின்றன. குடிநீர் பாயும் குழாய்கள், தண்ணீர் சேகரிப்பு தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடக்கவுள்ளது. இயந்திரங்களை பழுதுநீக்க வேண்டியுள்ளது. இதனால் அதே போன்று, நடமாடும் காவிரி குடிநீர் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு சென்று குடிநீர் விநியோகிக்கும் டேங்கர்களும் சுத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே நாளை முதல் 17ம் தேதி வரையிலான மூன்று நாட்கள், காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது. டேங்கர் மூலமாகவும் மூன்று நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது. பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக, மூன்று நாட்களுக்கு தேவையான குடிநீரை சேகரித்து வைத்துக்கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.