உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கணவரை கொன்ற மனைவி கள்ளக் காதலன் உட்பட மூவர் கைது

 கணவரை கொன்ற மனைவி கள்ளக் காதலன் உட்பட மூவர் கைது

தாவணகெரே: கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை கொலை செய்து, உடலை ஆற்றில் வீசிய மனைவி கைது செய்யப்பட்டார். தாவணகெரே நகரின், பாமேனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ரகு, 36. இவரது மனைவி ஸ்ருதி, 28. ரகு குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். இது, மனைவிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதே காரணத்தால், இவர்களுக்குள் தினமும் தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே, மூன்று ஆண்டுகளுக்கு முன், ஸ்ருதிக்கு, உபயத்துல்லா, 30, என்ற நபரின் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் ரகசியமாக சந்தித்து, உல்லாசமாக இருந்தனர். தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வரும் ரகுவுடன் வாழ, ஸ்ருதிக்கு விருப்பம் இல்லை. இவரை தீர்த்துகட்டினால், இருவரும் சேர்ந்திருக்கலாம் என, ஸ்ருதியும், உபயத்துல்லாவும் நினைத்தனர். சில நாட்களுக்கு முன், ரகுவின் குடிப்பழக்கத்தை சாதகமாக பயன்படுத்தி, தாவணகெரேவில் உள்ள குடி மையத்திற்கு அவரை உபயத்துல்லாவும், அவரது கூட்டாளி சுரேஷும் அழைத்து வந்தனர். அவரை அளவுக்கு அதிகமாக குடிக்க வைத்தனர். பின், துங்கபத்ரா ஆற்றின் அருகில் அழைத்து வந்தனர். அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். உடலை ஆற்றிலேயே வீசி விட்டு தப்பினர். இவர்களுக்கு கொலை செய்ய ஆலோசனை கூறியது ஸ்ருதி தான். இந்த விஷயம் அவரது சகோதரிக்கு தெரிந்திருந்தது. கொலை நடந்த பின், ஹடதி போலீஸ் நிலையத்துக்கு சென்று, தன் கணவர் காணாமல் போனதாக நாடகமாடி, ஸ்ருதி புகார் அளித்தார். இதையடுத்து, கிராமத்துக்கு வந்த போலீசார், பலரிடம் விசாரணை நடத்தினர். ஸ்ருதியின் சகோதரியிடம் விசாரித்த போது, நடந்த சம்பவத்தை கூறினார். அதன்பின் ஸ்ருதி, அவரது கள்ளக்காதலன் உபயத்துல்லா, சுரேஷ் ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், துங்கபத்ரா ஆற்றில், ரகுவின் உடலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !