ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி உட்பட மூவர் கைது
மங்களூரு:நிலத்தை சமன்படுத்த அனுமதி அளிக்க, நில உரிமையாளரிடம் 50,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சுரங்கத் துறை பெண் அதிகாரி உட்பட மூவர் லோக் ஆயுக்தாவிடம் சிக்கினர்.தட்சிண கன்னடா மாவட்டம், உல்லாள் தாலுகாவின், இரா கிராமத்தில் 1.39 ஏக்கர் பரப்பளவிலான தனியார் நிலம் உள்ளது. இதில் 35 சென்ட் இடத்தில் வீடு கட்ட உரிமையாளர் விரும்பினார். கட்டடம் கட்டுவதற்கு முன், அங்கிருந்த கற்களை அகற்றி நிலத்தை சமன்படுத்த வேண்டியிருந்தது.இதற்கு அனுமதி கோரி, உல்லாள் நகரின் சுரங்கம், நில ஆய்வியல் துறையில் 2024 அக்டோபர் 28ம் தேதி மனு அளித்தார். ஆனால் நீண்ட நாட்களாகியும், அனுமதி அளிக்கவில்லை. இது குறித்து விசாரிக்க நில உரிமையாளர், அந்த அலுவலகத்துக்கு சென்றார். அப்போது, இது தொடர்பான கோப்பில் கையெழுத்திட 50,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என, சுரங்கத் துறையின் தற்காலிக துணை இயக்குநர் கிருஷ்ணவேணி, அலுவலக ஊழியர் பிரதீப் மூலமாக கேட்டார். இதை பற்றி, நில உரிமையாளர் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார். நில உரிமையாளர் நேற்று முன்தினம் மதியம் 50,000 ரூபாயுடன், சுரங்க துறை அலுவலகத்துக்கு சென்றார். கிருஷ்ணவேணி, தன் கார் ஓட்டுநர் மது மூலமாக, லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு வந்த லோக் ஆயுக்தாவினர், கிருஷ்ணவேணியை கையும், களவுமாக பிடித்தனர். ஊழியர் பிரதீப், ஓட்டுநர் மது ஆகியோரையும் கைது செய்தனர்.