வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்வு
கோலார்: தென் மாநிலங்களில் அதிகளவு தக்காளி விற்பனை செய்யப்படும் மிகப் பெரிய ஏ.பி.எம்.சி., எனும் விவசாய விளைப்பொருள் சந்தைப் படுத்துதல் கழகம் கோலாரில் உள்ளது. இங்கிருந்து தான் பிற நகரங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அண்மையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தக்காளி வரத்து குறைந்துள்ளது; தேவை அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 15 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தரமான தக்காளி 200 --- 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதன் விலை 500 - 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை குறைவாக இருந்ததால் சோகத்தில் இருந்த தக்காளி விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிலோ தரமான தக்காளி 40 - 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோலாரில் இருந்து பெங்களூரு, சென்னை, மஹாராஷ்டிராவுக்கு அனுப்பப்படுகிறது. அண்டை நாடான வங்க தேசத்திற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தக்காளி உற்பத்தியாளர் சீனிவாஸ் கூறுகையில், ''வழக்கமாக நாள்தோறும் 6,000 பெட்டிகளுக்கும் அதிகமாக விற்பனைக்கு வரும். ஆனால் நேற்றும், நேற்று முன்தினமும் 1,000 பெட்டிகள் வரை மட்டுமே விற்பனைக்கு வந்தது. ''தொடர்ந்து பெய்து வரும் மழைதான் வரத்து குறைவுக்கு காரணம். வெளிநகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் தக்காளியும் குறைந்து விட்டது,'' என்றார். பங்கார்பேட்டையில் காய்கறிகள் விற்கும் ராமச்சந்திரா கூறுகையில், ''அதிக விலை கொடுத்து வாங்கி அதனை இரட்டிப்பு விலைக்கு விற்க வேண்டியதாகி விட்டது,'' என்றார்.