உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காந்தாரா - 1 திரைப்படத்தை பார்த்து நடனம் ரசிகர்களுக்கு துளு தலைவர் கடும் கண்டனம்

காந்தாரா - 1 திரைப்படத்தை பார்த்து நடனம் ரசிகர்களுக்கு துளு தலைவர் கடும் கண்டனம்

பெங்களூரு : காந்தாரா - 1 திரைப்படம் கடந்த 2ம் தேதி கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் வெளியானது. இந்த படம் பல மொழிகளில் வெளியாகி, மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களில் சிலர், தியேட்டர்களிலே பஞ்சுருளி சாமி போல கத்துவது, நடனம் ஆடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சிலர் வேண்டுமென்றே இணையத்தில் பிரபலமாவதற்காகவும் செய்து வருகின்றனர். துளு மக்களின் தெய்வ வழிபாட்டை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து, துளு கூட்டமைப்பின் தலைவர் சுந்தர்ராஜ் ராய் கூறியதாவது: துளு மக்களின் இறை வழிபாடு குறித்து திரைப்படம் எடுக்கலாம். அதில் தவறு எதுவுமில்லை. ஆனால், தியேட்டரில் சில ரசிகர்கள் நடந்து கொள்ளும் விதம் மனதிற்கு வேதனையாக உள்ளது. இந்த செயல்களில் ஈடுபடுவோரை வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்று பல மாநிலங்களிலும் நடக்கிறது. ஆனால், கர்நாடகாவில் நடப்பதை நம்மால் தடுக்க முடியும். இதுகுறித்து நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு கடிதம் எழுதி உள்ளேன். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அவர் கட்டாயம் அறிவுரை வழங்க வேண்டும். ஆனால், கடிதத்திற்கு ரிஷப் ஷெட்டியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஹிந்து மத கலாசாரம் பலராலும் இழிவுபடுத்தப்படுகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு போலீசார் உதவ வேண்டும். சினிமாவை பார்த்து தியேட்டரில் யாருக்கும் சாமி வராது. இவ்வாறு அவர் கூறினார். பெங்களூரில் உள்ள திரையரங்கின் வாசலில் காந்தாரா படம் பார்க்க வந்த ஒரு ரசிகர், பஞ்சுருளி சாமி போல நடித்துக் காட்டினார். இந்த வீடியோ இணையத்தில் பரவியது. 'மத நம்பிக்கைகளுடன் விளையாட வேண்டாம்' என, அந்த நபருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த செயலுக்கு அந்நபர் வீடியோ மூலம் நேற்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார். வீடியோவில், 'என் பெயர் வெங்கட். நான் வேண்டுமென்று அது போல செய்யவில்லை. துளு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாரும் என்னை போல செய்ய வேண்டாம்' என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ