உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வெளிநாட்டவருக்கு வீடு கொடுத்த இருவர் கைது

 வெளிநாட்டவருக்கு வீடு கொடுத்த இருவர் கைது

பெங்களூரு: சட்டவிரோதமாக வெளிநாட்டு பிரஜைகளுக்கு, வாடகைக்கு வீடு கொடுத்த இரண்டு வீட்டு உரிமையாளர்கள், கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விற்பனை, விபசாரம், கொள்ளை போன்ற குற்றங்களில் சிலர் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த சில நபர்கள், பெங்களூரில் வாடகை வீடுகளில் தங்கி போதைப்பொருள் விற்று, போலீசாரிடம் சிக்குகின்றனர். சட்ட விதிகளின்படி, வெளி நாட்டவருக்கு வீடு அல்லது அறையை, வாடகைக்கு கொடுத்த, 24 மணி நேரத்துக்குள் வீட்டு உரிமையாளர்கள் இணையதளம் வாயிலாக தெரிவிப்பது கட்டாயம். மேலும், அந்தந்த பகுதிகளின் போலீஸ் நிலையத்துக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில், பெங்களூரு வடக்கு தாலுகாவின், பைலகோனேனஹள்ளியின், சித்தேஸ்வரா லே - அவுட்டில் வசித்து வரும் சுனில், 45, குதுரேகெரேவின் ஜெயராம், 42, ஆகியோர், தங்களின் வீடுகளை வெளிநாட்டவருக்கு, வாடகைக்கு கொடுத்துள்ளனர். இதுபற்றி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவில்லை. எனவே, இருவரையும் சி.சி.பி., போலீசார், நேற்று கைது செய்தனர். போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாட்டவருக்கு வாடகைக்கு வீடு கொடுத்ததை, மூடி மறைத்த, இரண்டு வீட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டினருக்கு வாடகைக்கு வீடு கொடுப்பதற்கு முன், அவர்களின் பாஸ்போர்ட், விசா ஆவணங்களை, உரிமையாளர்கள் கட்டாயமாக பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !