வக்ப் திருத்த மசோதா குறித்து அவதுாறு பரப்பிய இருவர் கைது
தாவணகெரே:தாவணகெரே மூன்றாவது வார்டின் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் அகமது கபீர் எனும் அகமது கான். இவர் சமீபத்தில், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக ஒரு வீடியோவை பதிவிட்டார்.வீடியோவில் மசோதா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளையும், வன்முறையை துாண்டும் வகையிலும் பேசி இருந்தார். இது குறித்து, ஆசாத் நகர் போலீசார், தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், அகமது கான் வெளியிட்ட வீடியோவை உருவாக்க உதவி செய்த சுபைர், கானி ஆகிய இருவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள அகமது கானை தேடி வருவதாக ஆசாத் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஸ்வின் குமார் தெரிவித்தார்.தாவணகெரே எஸ்.பி., உமா பிரசாந்த் நேற்று கூறுகையில், ''வக்ப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட முன்னாள் கவுன்சிலர் அகமது கானை தேடி வருகிறோம். இந்த வீடியோவை உருவாக்க உதவிய சுபைர், கானியை கைது செய்து உள்ளோம்,'' என்றார்.பா.ஜ., - எம்.எல்.சி.,யான சி.டி.ரவி, தன் 'எக்ஸ்' தளத்தில், 'வக்ப் மசோதா குறித்து வன்முறையை துாண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட முன்னாள் காங்., கவுன்சிலருக்கு எதிராக மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓட்டு அரசியலுக்காக சும்மா இருக்கின்றனர்' என, குற்றம் சாட்டியுள்ளார்.