வேறு மாநிலத்தில் பதிவு: இரு சொகுசு கார்களுக்கு அபராதம்
பெங்களூரு: புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட மர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பெராரி 812 சூப்பர் பாஸ்ட் கார் ஆகியவை, பெங்களூரில் இயங்கி வந்தன. நடப்பாண்டு மார்ச்சில் இதை கண்டுபிடித்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், கார்களின் உரிமையாளர் ஈஸ்ட் பாயின்ட் குரூப் சி.இ.ஒ., ராஜிவ் கவுடாவுக்கு, நோட்டீஸ் அளித்தனர். கார்களை வாங்கி மூன்று மாதங்கள் ஆனதாக உரிமையாளர் கூறினார். கார்கள் எந்த நாட்களில், எங்கெங்கு ஓடின என்பதை, டிராபிக் மேனேஜ்மென்ட் சென்டரில் தகவல் பெற்றபோது, அந்த கார்கள் 12 மாதங்களுக்கு மேலாக கர்நாடகாவில் ஓடுவது தெரிந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் நடவடிக்கை எடுத்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள், கார்களுக்கு அபராதத்துடன் வரி செலுத்தும்படி உத்தரவிட்டனர். இதன்படி ஒரு காருக்கு 37.03 லட்சம் ரூபாய், மற்றொரு காருக்கு 61.94 லட்சம் ரூபாய் வரியை அதன் உரிமையாளர் செலுத்தினார்.