உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கட்டடத்தில் குண்டு வெடிப்பு பீஹாரில் மேலும் இருவர் கைது

கட்டடத்தில் குண்டு வெடிப்பு பீஹாரில் மேலும் இருவர் கைது

புலிகேசிநகர்: புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் குண்டு வெடித்த வழக்கில், பீஹாரை சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதமே இந்த சம்பவத்திற்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது. பெங்களூரு புலிகேசிநகர் ஜெர்மியா சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் 7 மாடி கட்டடத்தில், கடந்த 20ம் தேதி மர்ம பொருள் வெடித்து சிதறியதில், கட்டடத்தின் காவலாளி அலாவுதீன், பெயின்டர் சூரஜ்குமார் படுகாயம் அடைந்தனர். வெடித்த மர்ம பொருளின் பாகங்களை ஆய்வு செய்த போது, ஐ.இ.டி., ரக குண்டுகள் என்பது தெரிந்தது. இதனால் நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமையும், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம் இருந்து தகவல் சேகரித்தது.

‘சாட்பாட்’ செயலி

இந்த வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவரும், ராய்ச்சூர் மஸ்கியில் வெல்டராக வேலை செய்தவருமான புர்ஹான் அகமது, 20, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில், அசாம் மாநிலத்தின் தினநாத்பூரின் ஜாஹிதுல் பர்யுயா, 27, சஜிதுல் லஷ்கர், 22 ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் குறித்து, போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று கூறியதாவது: கைதான ஜாஹிதுல், கட்டட காவலாளி அலாவுதீன் இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். இருவரும் உறவினர்கள் ஆவர். இருவருக்கும் இடையில் குடும்ப பகை, நில தகராறு இருந்தது. ஜாஹிதுல் தங்கையின் திருமண வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட அலாவுதீன் காரணமாக இருந்துள்ளார். கோபம் அடைந்த ஜாஹிதுல், தனது நண்பர்கள் சஜிதுல் லஷ்கர், புர்ஹான் அகமதுவுடன் சேர்ந்து, அலாவுதீனை கொலை செய்ய திட்டம் தீட்டினார். ராய்ச்சூரின் மஸ்கியில் வெல்டிங் பட்டறையில் வேலை செய்த புர்ஹான் அகமது, ‘சாட்பாட்’ செயலியில் தகவல் சேகரித்து, ஐ.இ.டி., ரக குண்டுகளை தயாரித்தார். அந்த குண்டை பார்சல் போல அட்டை பெட்டிக்குள் வைத்து, சஜிதுல்லிடம் கொடுத்து அனுப்பினர். மஸ்கியில் இருந்து பெங்களூரு வந்த அவர், யாரோ ஒருவரிடம் மொபைல் போன் வாங்கி அலாவுதீனிடம் பேசியுள்ளார். உங்களுக்கு பார்சல் வந்ததாக கூறி, இன்னொருவர் மூலம் குண்டு இருந்த பார்சலை அலாவுதீனுக்கு கொடுத்து அனுப்பினார். கடந்த 20ம் தேதி அந்த பாக்சை திறந்த போது, குண்டு வெடித்து சிதறியது தெரிந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !