உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தர்மஸ்தலா விவகாரத்தில் மேலும் இருவர் புகார் தோண்டும் இடங்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பு

தர்மஸ்தலா விவகாரத்தில் மேலும் இருவர் புகார் தோண்டும் இடங்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பு

மங்களூரு : 'தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்டதை நாங்கள் பார்த்தோம்' என, தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில், மேலும் இருவர் புகார் அளித்துள்ளனர். தோண்டும் இடங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட, பெண்களின் உடல்களை புதைத்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. புகார்தாரர் அடையாளம் காட்டிய 13 இடங்களை 'மார்க்கிங்' செய்து, கடந்த மாதம் 29ம் தேதி முதல் தோண்டும் பணிகள் துவங்கின. அடையாளம் காணப்பட்டதில் 6, 11வது இடங்களில் எலும்புக் கூடுகள் சிக்கின. 13வது இடம் இன்னும் தோண்டப்படவில்லை. மற்ற இடங்களில் எதுவும் சிக்கவில்லை. இதற்கிடையில் புகார்தாரர் அடையாளம் காட்டிய இடத்தை தவிர, வேறு சில இடங்களிலும் உடல்களை புதைத்ததாக, எஸ்.ஐ.டி., அதிகாரிகளிடம் கூறினார். இதனால் மேலும் இரண்டு இடங்களில் தோண்டப்பட்டது; அங்கேயும் எதுவும் கிடைக்கவில்லை. நேற்று காலையில் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரித்தபோது, தர்மஸ்தலா ரத்னகிரி பெட்டா பகுதியில் சில உடல்களை புதைத்ததாக கூறினார். அவரை அங்கு அழைத்துச் சென்றனர். ரத்னகிரி பெட்டாவில் தற்போது பாகுபலி சிலை உள்ளது. 'சிலை அமைந்துள்ள பகுதியில் தான், உடல்களை புதைத்தேன்' என்று புகார்தாரர் கூறியதால் அங்கும் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் 10 அடி தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை. பாகுபலி சிலைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மஹா மஸ்தாபிஷேகம் நடந்ததால், அப்பகுதியில் நிறைய மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் புகார்தாரர் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து 20 மீட்டர் துாரத்தில், இன்னொரு இடத்திலும் தோண்டும் பணி நடந்தது. அதற்குள் இரவு ஆகிவிட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன. இதற்கிடையில், 'தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்டபோது, நாங்கள் பார்த்தோம். எத்தகைய விசாரணைக்கும் தயார்' என கூறி, தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில், நேற்று மேலும் இருவர் புகார் செய்தனர். இது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை