| ADDED : நவ 13, 2025 04:14 AM
பெங்களூரு: ஒரே படத்தால் பிரபலமடைந்த மூத்த நடிகர் சென்னேகவுடா, 89, உடல் நிலை பாதிப்பால் நேற்று காலமானார். கடந்த 2015ல் கன்னடத்தில், 'திதி' என்ற திரைப்படம் திரைக்கு வந்தது. மாண்டியாவின், நோடேகொப்பலு கிராமத்தில் நடக்கும் கதையாகும். கிராமத்து வாழ்க்கை, குடும்ப பிரச்னை, நில பிரச்னைகளை மையமாக கொண்டிருந்தது. இந்த படத்தில் சென்னேகவுடா, 89, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, அனைவரையும் ஈர்த்தார். தன் 80 வயதில் திரையுலகில் அறிமுகமாகி, ஒரே படத்தில் பிரபலமடைந்தார். கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அன்று முதல் இவரை அனைவரும் கட்டப்பா என்றே அழைக்க துவங்கினர். இந்த திரைப்படம் 11க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றது. அடுத்தடுத்து எட்டு படங்களில் நடித்தார். அதிகமான பட வாய்ப்புகளை பெற்ற சென்னேகவுடா, இதய பிரச்னை, ஆஸ்துமா பிரச்னையால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்தனர்.