உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  போலி வாக்காளர்களை சேர்க்கிறது காங்., அரசு மீது விஜயேந்திரா புகார்

 போலி வாக்காளர்களை சேர்க்கிறது காங்., அரசு மீது விஜயேந்திரா புகார்

பெங்களூரு: ''பெங்களூரின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 10 முதல், 15,000 வாக்காளர்களை, சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் அரசு சேர்த்துள்ளது,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா குற்றம் சாட்டினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 101வது பிறந்த நாளையொட்டி, பெங்களூரின் மஹாலட்சுமி லே - அவுட் சட்டசபை தொகுதியின் பா.ஜ., - எம்.எல்.ஏ., கோபாலய்யா அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் விஜயேந்திரா பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது: பெங்களூரின்ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், புதிதாக, 10 முதல் 15,000 போலி வாக்காளர்கள், சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மாநில அரசே முன் நின்று, வாக்காளர்கள் பட்டியலில் போலி பெயர்களை சேர்த்துள்ளது. இதுகுறித்து, தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் தோற்று, விரக்தியில் உள்ள காங்கிரஸ், ஓட்டு திருட்டு குற்றச்சாட்டை சுமத்தி, பா.ஜ.,வுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறது. இதை எதிர்த்து, நாம் குரல் கொடுக்க வேண்டும். வரும் நாட்களில் தொண்டர்கள் போராட்டம் நடத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் ஊழல் இல்லை. ஏன் என்றால் அவருக்கு வாஜ்பாய் வழிகாட்டியாக இருந்தார். மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஊழலற்ற அரசாகும். நாட்டில் உள்ள எந்த எதிர்க்கட்சிகளும், மோடி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்த முடியாது.கர்நாடக காங்கிரஸ் அரசை, மக்கள் சபிக்கின்றனர். அடுத்த தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார். எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர் பேசியதாவது: வாஜ்பாயின் பிறந்த நாளை நாடே கொண்டாடுகிறது. கல்வியில் மேம்பாட்டை கொண்டு வந்தவர். கிராமப்புற சாலைகளை தரம் உயர்த்தினார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இத்தகைய தலைவரை நினைத்து பார்ப்பது நமது கடமை. மாநிலத்தில் போதைப்பொருள் மாபியாக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சட்டம் - ஒழுங்கு பாழாகியுள்ளது. முதல்வர் சித்தராமையா ஆட்சி திசை மாறியுள்ளது. பதவிக்காக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே குஸ்தி நடக்கிறது. இதனால், ஆட்சி இயந்திரம் தடுமாறி வளர்ச்சி பணிகள் பாதிக்கின்றன. காங்கிரஸ் அரசின் திட்டங்களால், மாநிலத்தின் கருவூலம் காலியாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தோற்றுள்ளது. வாக்குறுதி திட்டங்கள் அவர்களுக்கு உதவவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை