விஜயேந்திராவுக்கு மீண்டும் பதவி? புதிய கட்சி துவங்க எத்னால் முடிவு
பெலகாவி: ''மாநில பா.ஜ.,வின் தலைவராக விஜயேந்திரா தொடர்ந்தால் ஜே.சி.பி., என்ற பெயரில் புதிய கட்சியை துவக்குவேன்,'' என, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார். பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடக மாநில பா.ஜ., தலைவராக விஜயேந்திராவை அறிவித்தால், ஜே.சி.பி., என்ற பெயரில் புதிய கட்சியை துவக்குவேன். 'ஜே' ம.ஜ.த.,; 'சி' காங்கிரஸ், 'பி' பா.ஜ.,வை குறிக்கும். இக்கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்கள், என் கட்சியில் சேருவர். இப்போதே பா.ஜ.,வில் 50 எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். எனவே, மாநில தலைவர் தேர்வு விஷயத்தில், பா.ஜ., மேலிடம் கவனமாக இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும், விஜயேந்திராவை, மாநில தலைவராக மீண்டும் நியமிக்கக் கூடாது. புதிய கட்சியை உருவாக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விஜயேந்திரா மாநில தலைவராக அறிவிக்கப்பட்டால், மறுநாளே என் கட்சி உதயமாகும். மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். மக்கள் எனக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஹிந்துத்துவாவுக்கு மக்கள் ஆதரவு காட்டுகின்றனர். ஜே.சி.பி., கட்சி, ஹிந்துத்துவாவின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் கட்சி. ஹிந்துத்துவா தான் முக்கிய விஷயம். இக்கட்சி, ஹிந்து சமூகத்தின் நாடித்துடிப்பாக செயல்படும். கர்நாடக காங்கிரசில் நவம்பர் புரட்சி ஏற்படுவது உறுதி. முதல்வ ர் பதவி எதிர்பார்ப்பவர்களுக்கு அப்பதவி கிடைக்காது. கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதல்வராவார். பல ஆண்டுகளாக முதல்வர் பதவிக்காக கார்கே காத்துள்ளார். முதல்வர் 'ரேசில்' அவர் பெயர் வந்தால், சிவகுமார், சதீஷ் ஜார்கிஹோளி உட்பட மற்றவர்கள் விலகிவிடுவர். இவ்வாறு அவர் கூறினார்.