உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பள்ளி மதிய உணவுக்கு அரிசி நன்கொடை வழங்கிய கிராமத்தினர்

பள்ளி மதிய உணவுக்கு அரிசி நன்கொடை வழங்கிய கிராமத்தினர்

ஹாவேரி: அரிசி இல்லாமல் 15 நாட்களாக அரசு பள்ளியில் மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி சிறார்களுக்கு கிராமத்தினரே மதிய உணவுக்கு வசதி செய்துள்ளனர். ஹாவேரி மாவட்டம், சவனுார் தாலுகாவின் செல்லாலா கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இதில் 300 மாணவ – மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் மதிய உணவுக்கு அரிசி காலியாகி விட்டது. அரிசி தேவை என, பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் அரிசி வழங்கவில்லை. அரிசி இல்லாததால், பள்ளியில் சில நாட்களாக மதிய உணவு தயாரிப்பது நிறுத்தப்பட்டது. மாணவ – மாணவியர் பசியுடன் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையறிந்த கிராமத்தினர், சிறார்களுக்கு மதிய உணவு நிற்க கூடாது என்பதால், 4 குவிண்டால் அரிசியை நன்கொடையாக வழங்கினர். இந்த அரிசியை பயன்படுத்தி, மாணவ – மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை கிராமத்தினர் செய்துள்ளனர். தாங்களே முன் நின்று சாப்பாடு தயாரித்து மாணவ – மாணவியருக்கு பரிமாறுகின்றனர். கிராமத்தினரின் உதவியால், மாணவர்களுக்கு 15 நாட்களாக உணவு கிடைக்கிறது. அதிகாரிகளின் அலட்சியத்தை கிராமத்தினர் கண்டித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ