உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மனைவி உட்பட நால்வரை கொன்றவருக்கு துாக்கு விராஜ்பேட் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 மனைவி உட்பட நால்வரை கொன்றவருக்கு துாக்கு விராஜ்பேட் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

குடகு: மனைவி உட்பட ஒரே குடும்பத்தின் நான்கு பேரை கொலை செய்தவருக்கு துாக்கு தண்டனை விதித்து விராஜ்பேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குடகு மாவட்டம் பொன்னம்பேட் தாலுகாவின் பேகூர் கிராமத்தில் வசித்தவர் நாகி, 30. இவருக்கு சுப்பிரமணி என்பவருடன் திருமணம் நடந்தது. ஐந்து வயதில் காவேரி என்ற மகள் உள்ளார். குடும்ப பிரச்னையால் கணவரை விட்டு பிரிந்து தன் தாத்தா கரியா, 75, பாட்டி கவுரி, 70,யுடன் பேகூர் கிராமத்தில் வசித்து வந்தார். நாகிக்கு 2024ல் கேரளாவை சேர்ந்த கிரிஷ், 35, அறிமுகமானார். இது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிரிஷும் கூட ஏற்கனவே திருமணமானவர். மனைவியை விட்டு பிரிந்து நாகியை திருமணம் செய்து கொண்டார். கிரிஷ் அவ்வப்போது பேகூர் வந்து செல்வார். கிரிஷுக்கு மனைவி நாகியின் நடத்தையில். சந்தேகம் ஏற்பட்டது. இந்த காரணத்தால் அவருடன் தகராறு செய்தார். நடப்பாண்டு மார்ச் 27ம் தேதி, மனைவியின் வீட்டுக்கு வந்தார். அப்போதும் மனைவியிடம், நீ வேறு யாருடனோ கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாய்' என, குற்றம் சாட்டி சண்டை போட்டார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. கோபமடைந்த கிரிஷ், கத்தியால் மனைவியை குத்தினார். இவ்வேளையில் தாயின் இடுப்பில் இருந்த மகள் காவேரியின் தலையில், கத்தி பாய்ந்து தாயும், மகளும் உயிரிழந்தனர். இவர்களை காப்பாற்ற வந்த தாத்தா கரியாவையும், பாட்டி கவுரியையும் கத்தியால் குத்தி கொலை செய்தார். ஒரே குடும்பத்தின் நால்வர் கொலையான சம்பவம், கிராமத்தை உலுக்கியது. இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த பொன்னம்பேட் போலீசார், கொலையாளியை தேடினர். சம்பவத்துக்கு பின், கிரிஷ் கேரளாவுக்கு தப்பியோடி தலைமறைவாக இருந்தார். அவரை கேரள போலீசாரின் உதவியுடன், போலீசார் கைது செய்தனர். விசாரணையை முடித்து, விராஜ்பேட் நகரின், இரண்டாவது மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் கிரிஷின் குற்றம் உறுதியானதால், அவருக்கு துாக்கு தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நடராஜ் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பளிக்கும் போது நீதிபதி, 'இரவு நிசப்தமான நேரத்தில், சிறு குழந்தை, மூத்த குடிமக்கள் உட்பட நால்வரின் உயிரை குற்றவாளி பறித்துள்ளார். அவர்களின் இறப்புக்கு நீதி தருவது, சட்டத்தின் கடமையாகும்' என கருத்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை