உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சட்டவிரோத கட்டுமானத்தில் ஈடுபடும் பில்டர்களுக்கு... எச்சரிக்கை!; கடும் நடவடிக்கை எடுக்க துணை முதல்வர் உத்தரவு

சட்டவிரோத கட்டுமானத்தில் ஈடுபடும் பில்டர்களுக்கு... எச்சரிக்கை!; கடும் நடவடிக்கை எடுக்க துணை முதல்வர் உத்தரவு

ஹலசூரு, ஆக. 18- பெங்களூரு ஹலசூரு கேட் வணிக வளாகத்தில் தீ விபத்து நடந்த பகுதியை, துணை முதல்வர் சிவகுமார் நேற்று பார்வையிட்டார். அப்போது, ''அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, சட்டவிரோதமாக அதிகமான தளங்கள் கட்டும் பில்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அவர் எச்சரிக்கை விடுத்தார். பெங்களூரு, சிக்பேட் தொகுதிக்கு உட்பட்ட ஹலசூரு கேட், நகரத்பேட்டில் உள்ள நான்கு மாடி வணிக வளாகத்தில், நேற்று முன்தினம் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், ராஜஸ்தானை சேர்ந்த மதன்குமார் - சங்கீதா தம்பதி, அவர்களின் இரு மகன்கள் உட்பட ஐந்து பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, கட்டடத்தில் தீ அணைக்கப்பட்டது. நிதியுதவி இதையடுத்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான், போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய், தனது சொந்த பணத்தில் இருந்து நிதியுதவி வழங்குவதாக அமைச்சர் ஜமீர் அமதுகான் அறிவித்தார். இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்ட இடத்தை துணை முதல்வர் சிவகுமார் நேற்று பார்வையிட்டார். அவருடன் பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். சிவகுமார், அதிகாரிகளிடம் அனைத்து தகவல்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். வாழ தகுதியற்றது இதையடுத்து, சிவகுமார் அளித்த பேட்டி: பெங்களூரில் பல இடங்களில் இரண்டு, மூன்று தளங்கள் கட்டப்பட வேண்டிய இடத்தில், எட்டு மாடிக்கும் மேல் கட்டப்படுகின்றன. இந்த கட்டடங்கள் மக்கள் வாழ தகுதியற்றவை. இதுபோன்ற சட்டவிரோத கட்டடங்களை இடிப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். பலவீனமான கட்டடங்கள் உடனடியாக இடிக்கப்படா து. இது போன்ற கட்டடங்களை, அதன் உரிமையாளர்கள் உடனடியாக சரி செய்ய வேண்டும். இல்லையெனில், அரசு நடவடிக்கை எடுக்கும். வரும் காலத்தில், அளவுக்கு மீறி தளங்கள் கட்ட அனுமதிக்கப்படாது. சட்டவிரோத கட்டுமானங்களில் ஈடுபடும் பில்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் நகரில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். இது ஒரே நாளில் முடிக்கக்கூடிய பணி கிடையாது. இந்த கணக்கெடுப்பு நடத்த பல மாதங்கள் ஆகும். புதுடில்லி, மும்பை போன்ற நகரங்களிலும், இதே நிலை தான் உள்ளது. நகரத்தில் உள்ள 70 சதவீத கட்டடங்கள், சட்ட விரோதமாக கட்டப்பட்டு உள்ளன. பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் வழங்கிய லே - அவுட்களிலும், அளவுக்கு மீறி கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. குடியிருப்பு சான்றிதழ் இல்லாத கட்டடங்களுக்கு, தண்ணீர், மின்சாரம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை பின்பற்றி, அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள, 4 லட்சம் குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. சிக்பேட்டை, நகரத்பேட்டில் உள்ள கட்டடங்களில் வறுமையில் உள்ள மக்கள் தான் வசிக்கின்றனர். இங்கு சட்டப்படி பார்த்தால், அனைத்து கட்டடங்களும் இடிக்கப்பட வேண்டி இருக்கும். இருவர் கைது தீ விபத்து நடந்த இடத்தை பார்த்து மிரண்டேன். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. அலட்சியமாக இருந்த கட்டட உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செயப்பட்டு, பாலகிருஷ்ணா ஷெட்டி, சந்தீப் ஷெட்டி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் வேறு மாநிலத்தில் இருந்து, பிழைப்பு நடத்துவதற்காக வந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க அரசு முடிவு செய்து உள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை