உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெண்களை புகைப்படம் எடுத்ததாக மேற்கு வங்க வாலிபர் மீது தாக்குதல்

பெண்களை புகைப்படம் எடுத்ததாக மேற்கு வங்க வாலிபர் மீது தாக்குதல்

பேட்ராயனபுரா : பெங்களூரு மாலில் பெண்களை மொபைல் போனில் புகைப்படம் எடுத்ததாகக் கூறி, மேற்கு வங்க வாலிபர் சரமாரியாக தாக்கப்பட்டார். பெங்களூரு, பேட்ராயனபுராவில், 'மால் ஆப் ஆசியா' உள்ளது. கடந்த 14ம் தேதி இரவு வாலிபர் ஒருவர் மாலுக்கு சென்றார். தன் மொபைல் போனில் புகைப்படங்களை எடுத்தார். மாலுக்கு வந்திருந்த பெண்களை புகைப்படம் எடுத்ததாகக் கூறி, அங்கிருந்த சிலர், வாலிபரிடம் தகராறு செய்தனர். பயந்து போன வாலிபர், மாலுக்குள் இருந்து வெளியே ஓடினார். அவரை விரட்டிச் சென்று அவர்கள் தாக்கினர். பின், அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். காயமடைந்த வாலிபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன்னை மொபைல் போனில் புகைப்படம் எடுத்ததாக பெண் ஒருவர் புகார் அளித்தார். வாலிபர் மீது வழக்கு பதிவானது. சிறிது நேரத்தில் அந்த பெண், புகாரை வாபஸ் பெற்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வாலிபர், 'பெண்களை புகைப்படம் எடுக்கவில்லை. மாலில் உள்ள கடைகளை தான் புகைப்படம் எடுத்தேன்' என்றார். போலீசார் மொபைல் போனை வாங்கி பார்த்தபோது, மாலில் உள்ள கடைகளின் புகைப்படங்கள் தான் இருந்தன. ஒருவேளை புகைப்படங்களை அழித்தாரா என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மொபைல் போனை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர். அந்த வாலிபர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அவரது பெயர், மற்ற விபரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி