கலெக்டர்களை லெப்ட் அண்டு ரைட் வாங்கிய சித்து திடீர் மனமாற்றத்திற்கான பரபரப்பு பின்னணி என்ன?
பெங்களூரு: இரண்டு நாட்கள் நடந்த கூட்டத்தில் கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்களை, முதல்வர் சித்தராமையா லெப்ட் அன்ட் ரைட் வாங்கி உள்ளார். ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்தவரின், திடீர் மாற்றத்திக்கான பரபரப்பு பின்னணி குறித்து, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடகாவில் 2023 மே மாதம் நடந்த, சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்று ஆட்சிக்கு வந்தது. தன் தலைமையில் கட்சி, ஆட்சிக்கு வந்ததால் முதல்வர் பதவி வேண்டும் என்று, கட்சியின் தலைவராக இருக்கும் சிவகுமார் மேலிடத்திடம் அடம்பிடித்தார்.ஆனால் தன் சாமர்த்தியத்தால் முதல்வர் பதவியை சித்தராமையா கைப்பற்றினார். 'ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள்' பதவி என்று ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதுவரை அதுபற்றி உறுதியான தகவல் இல்லை. மனம் இல்லை
கடந்த மே 20ம் தேதியுடன், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மேலிடத்தில் போட்ட ஒப்பந்தம் உண்மை என்றால், வரும் அக்டோபரில், முதல்வர் பதவியை சிவகுமாருக்கு, சித்தராமையா விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால் பதவியை விட்டு தர அவருக்கு மனம் இல்லை என்று கூறப்படுகிறது.முதல்வர் நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொள்ளும் வகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அமல்படுத்தப்படும் என்று சித்தராமையா கூறினார். இதன் வாயிலாக அஹிந்தா எனும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் மனதில் இடம்பிடித்து, அவர்கள் ஆதரவுடன் முதல்வராக தொடரலாம் என்பது அவரது கணக்கு. குற்றச்சாட்டு
ஆனால் துணை முதல்வர் சிவகுமார் சார்ந்த ஒக்கலிகர் மற்றும் லிங்காயத் சமூகங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கை அமல்படுத்தப்பட்டால் அரசு கவிழ்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. அவசரப்பட வேண்டாம் என்று சித்தராமையாவுக்கு, மேலிடம் கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளது.இதற்கிடையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில், மேம்பாட்டுப் பணிகள் நடக்கவில்லை. ஊழியர்கள் அளவில் இருந்து அதிகாரிகள் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது என்ற குற்றச்சாட்டுகள் தினமும் கேட்கின்றன.குறிப்பாக மக்கள் தொடர்பான முக்கிய பிரச்னைகளை சரிசெய்ய, மாவட்ட கலெக்டர்கள், சி.இ.ஓ., எனும் முதன்மை செயல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தங்கள் இஷ்டத்திற்கு கலெக்டர்கள் செயல்படுகின்றனர் என்று, எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கொப்பாலில் இரும்பு தொழிற்சாலை விஷயத்தில் முதல்வர் உத்தரவையும் மீறி, தொழிற்சாலைக்கு ஆதரவாக கலெக்டர் நளின் அதுல் செயல்பட்டார். அவரை இன்னும் பணியிட மாற்றம் செய்யாமல் வைத்துள்ளனர். இதை வைத்தும் முதல்வரை, எதிர்க்கட்சியினர் வாட்டி வதைத்தனர். கலெக்டர்கள் தங்கள் இஷ்டப்படி உள்ளனர் என்றும், சில அமைச்சர்கள், முதல்வரிடம் போட்டுக் கொடுத்துள்ளனர்.இதனால் கடுப்பான சித்தராமையா, இரண்டு நாட்கள் நடந்த கூட்டத்திலும் கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்களை லெப்ட் அண்டு ரைட் வாங்கினார். உங்கள் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு வேலை செய்யுங்கள் என்றும் கடுமையாக சாடினார்.பொதுவாக சித்தராமையா, அரசு அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதே இல்லை. ஆனால் இரண்டு நாட்களாகவே முதல்வர் கடுகடுப்பாக இருந்தது கலெக்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சூரிய நமஸ் காரம்
ஹைதராபாதைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜ., ஆட்சிக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது. வாக்குறுதித் திட்டங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என்று, மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அந்த கருத்துக்கணிப்பு கூறியது. ஆனால் சித்தராமையா முதல்வராக இருக்க, பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.மக்களிடம் தனக்கு செல்வாக்கு உள்ளது. ஆனால் வாக்குறுதித் திட்டங்கள், மேம்பாட்டுப் பணிகள், அரசு திட்டங்களை கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்கள் சரியாக செயல்படுத்ததால் தான் அரசுக்கு அவப்பெயர் கிடைத்துள்ளது என்று நினைத்ததால், கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்களை முதல்வர் திட்டித் தீர்த்துள்ளார்.இனிமேலாவது கலெக்டர்களை வேலை ஏவி, மக்கள் பணி செய்து எப்படியாவது முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதும், சித்தராமையாவின் கணக்காக உள்ளது.இதற்கு எப்படியும் சிவகுமார் முட்டுக்கட்டையாக இருப்பார். அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, கலெக்டர்களிடம் கறாராக நடந்து இருந்தால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து இருக்கும். முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடித்து இருக்கலாம். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு என்பது போன்றுள்ளது சித்தராமையாவின் தற்போதைய நிலை.